வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதன்பின்னர் அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் (ஆகஸ்ட் 18-23) தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு பின் பும்ரா இந்திய அணிக்கு திரும்பவுள்ளதால், அயர்லாந்து தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அயர்லாந்து தொடருக்கான இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் நெருங்கி வருவதால், ராகுல் டிராவிட்டுக்கு சில வாரங்கள் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் இல்லாத நிலையில் வழக்கமாக விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளர் பொறுப்பை கவனிப்பார். ஆனால் இந்த முறை இந்திய அணியினருடன் விவிஎஸ் லக்ஷ்மண் பயணிக்க போவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அயர்லாந்து தொடருக்கு தலைமை பயிற்சியாளராக உள்நாட்டு போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்ற முன்னாள் வீரர் ஸ்டால்வார்ட் சிதான்ஷூ கோடக் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிதான்ஷு கோடக் இந்தியா 'ஏ' அணிக்கு தலைமை பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் அயர்லாந்து தொடருக்கான பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பஹுதேலே செல்ல உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.