2024 ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் மாதம் 22-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை நடத்தப்படவிருக்கிறது. இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஐபிஎல் ஏலம் கடந்த மாதம் 19-ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் எப்போதும் இல்லாத வகையில் ஆஸ்திரேலியா வீரர்கள் பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் 20 கோடி ஏலத்திற்கு எடுக்கப்பட்டனர்.
மும்பை இந்தியன்ஸ் டிரேடிங், சிஎஸ்கே ஸ்மார்ட் ஏலம் என இரண்டு ஜாம்பவான் அணிகளும் அடுத்த ஐபிஎல் கோப்பைக்காக தயாராகி வருகின்றனர். அதேபோல ஆர்சிபி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் கோப்பையை வெல்ல தீவிரம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில் எப்போதும் இல்லாத வகையில், அதிக ஒப்பந்த தொகையுடன் ஐபிஎல்லின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை தக்கவைத்துள்ளது டாடா நிறுவனம்.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதிகாரபூர்வ ஐபிஎல் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியன் பிரீமியர் லீக்கின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமையை 5 ஆண்டு காலத்திற்கு டாடா குழுமத்திற்கு பிசிசிஐ சனிக்கிழமை வழங்கியது. உலகளவில் பல்வேறு உயரங்களை எட்டிவரும் டாடா குழுமம், 2500 கோடி ரூபாய் என்ற சாதனை தொகையுடன் பிசிசிஐ உடனான தனது தொடர்பை புதுப்பித்துள்ளது. இது லீக் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஸ்பான்சர்ஷிப் தொகையாக அமைந்துள்ளது. கடந்த 2022, 2023-ம் ஆண்டுகளில் பெண்கள் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராகவும் டாடா குழுமம் இருந்துவருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் குறித்து பேசியிருக்கும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “IPL-ன் டைட்டில் ஸ்பான்சராக டாடா குழுமத்துடன் இணைந்திருப்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதற்கு முன் நடக்காத இந்த அதிகப்படியான ஒப்பந்தமானது, சர்வதேச விளையாட்டு அரங்கில் ஐபிஎல்லின் அபரிமிதமான அளவு மற்றும் உலகளாவிய தாக்கத்தை பிரதிபலிக்கிறது” என்று கூறியுள்ளார்