ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மங்கோலிய கிரிக்கெட் அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மே 7 ஆம் தேதி நடந்தது. இதில், முதலில் பேட் செய்த ஜப்பான் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 199 ரன்களை எடுத்தது. 200 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மங்கோலிய அணியோ 12.4 ஓவர்களில் 33 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்நிலையில் மே 8 ஆம் தேதி அதே கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது டி20 போட்டி நடந்தது. அதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜப்பான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்தது. 218 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மங்கோலியா 8.2 ஓவர்களில் 12 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இதனால் ஜப்பான் 205 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடரிலும் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
மங்கோலிய அணியில், அந்த அணியின் கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் உட்பட 6 பேர் டக் அவுட் ஆகினர். ஒருவர் 4 ரன்களும், இருவர் தலா 2 ரன்களும், ஒருவர் 1 ரன்னும் சேர்த்தனர். எக்ஸ்ட்ராஸில் மூன்று ரன்கள் கிடைத்துள்ளன.
டி20 வரலாற்றில் isle of man அணி ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது. இந்த போட்டி 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது மோசமான சாதனையின் மூலம் 2-ஆவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது மங்கோலியா அணி. முன்னதாக, செக்குடியரசுக்கு எதிராக 2019-இல் துருக்கி 21 ரன்கள் அடித்ததே 2-ஆவது குறைந்தபட்சமாக இருந்தது.
இந்த புதன்கிழமை ஆட்டத்தில் ஜப்பான் அணியின் கசூமா 3 வைட்களை வீசாமல் இருந்திருந்தால், மங்கோலியா 9 ரன்களில் ஆட்டமிழந்து, வரலாற்றி லேயே மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்திருக்கும்.
மறுபுறம் இந்த ஆட்டத்தில் 205 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஜப்பான் டி20 வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற 4-ஆவது அணியாக புதிய சாதனையையும் படைத்துளது. இதே மங்கோலியாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேபாள அணி 273 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே அதிகபட்ச வெற்றியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.