இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள், ஐந்து டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியை நேற்று முன்தினம் பிசிசிஐ அறிவித்தது. 16 பேர் கொண்ட டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகத் தொடர்கிறார். துணை கேப்டனாக அஜிங்க்ய ரஹானே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ரஹானேவுக்கு பதிலாக சுப்மன் கில் அல்லது அக்சர் படேலை துணை கேப்டனாக அறிவித்திருக்கலாம் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுபற்றி அவர் பேட்டி ஒன்றில் கூறுகையில், ''அஜிங்க்ய ரஹானே துணை கேப்டனாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் நீங்கள் இந்த சமயத்தில் ஒரு இளம் வீரரை கேப்டனாக வளர்க்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளீர்கள். குறைந்தபட்சம் இளம் வீரர்களிடம் நாங்கள் வருங்கால கேப்டனை உருவாக்க உள்ளோம் என்றாவது சொல்லுங்கள். அப்போது தான் அந்த இளம் வீரர்கள் தங்களை வருங்கால கேப்டனாக நினைத்து வளர்வார்கள்.
இந்த நிலைமையில் சுப்மன் கில் மற்றும் அக்சர் படேல் ஆகியோர்தான் துணை கேப்டனாக அறிவிக்க தகுதியானவர்களாக இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக அக்சர் படேல் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேறி வருகிறார். அவருக்கு துணை கேப்டன் பொறுப்பை வழங்குவது எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வைக்கும். எனவே என்னுடைய பார்வையில் இந்த இருவர்கள் தான் துணை கேப்டன் பதவிக்கு பரிந்துரைக்கக் கூடியவர்கள். இல்லையென்றாலும் கூட இசான் கிஷான் போன்ற ஏதேனும் அணிகள் தங்களுடைய இடத்தை நிலைநாட்டிய இளம் வீரருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுக்கலாம்” என்று கூறினார்.