இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லமும், கேப்டனாக பென் ஸ்டோக்ஸும் பொறுப்பேற்ற பிறகு இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான பேட்டிங் அணுகுமுறையை ஆடிவருகிறது. போட்டியில் வெற்றி அல்லது தோல்வி என ஏதாவது ஒன்று தான் இருக்கவேண்டும், சமன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற “பாஸ்பால்” அணுகுமுறை என்பது உண்மையில் ரசிக்கும்படியாக தான் உள்ளது. ஆனால், அது எந்தளவு ஆரோக்கியமான ஒன்றாகவும், எதிர்காலத்தில் இங்கிலாந்தின் கிரிக்கெட்டை வலுப்படுத்தக் கூடியாதாகவும் இருக்கப்போகிறது என்ற கேள்விகள் மட்டும் ஓய்ந்தபாடில்லை.
இதுவரை வென்ற அணிகளுக்கு எதிராகவெல்லாம் இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறை கைக்கொடுத்தது, ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற அணியான ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கைக்கொடுக்குமா? என்ற கேள்வி, ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வைக்கப்பட்டது.
முதல் இரண்டு ஆஷஸ் போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றதற்கு பிறகு இங்கிலாந்து அணி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. 0-2 என கிட்டத்தட்ட ஆஷஸ் தொடரில் சொந்த மண்ணில் தோற்கப்போகிறது என்று கூறப்பட்டாலும், சில டெஸ்ட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் மட்டும் இங்கிலாந்து அணியால் இங்கிருந்து 3-2 என வெல்லமுடியும் என்று தெரிவித்தனர். அந்தளவு இங்கிலாந்தின் பாஸ்பால் ஆட்டம் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது.
ரசிகர்களின் எண்ணத்தை ஏமாற்றாத இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை 2-2 என சமன் செய்து விமர்சித்த அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளது. எப்போதைக்குமான சிறந்த ஆஷஸ் தொடர் 2005-ம் ஆண்டு ஆஷஸா? அல்லது 2023 ஆஷஸா? என ரசிகர்கள் ஒப்பிடும் அளவிற்கு தரமான போட்டிகளை விருந்தாக படைந்துள்ளன இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகள்.
2001க்கு பிறகு இங்கிலாந்தில் ஆஷஸ் தொடரை வென்றுவிடலாம் என்ற ஆஸ்திரெலிய கனவை உடைத்திருக்கும் இங்கிலாந்து அணி, பாஸ்பால் அணுகுமுறை ஆட்டத்தில் 18 போட்டிகளில் 14 வெற்றி என வெற்றிநடை போடுகிறது. இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இங்கிலாந்துக்கு பாஸ்பால் ஆட்டம் கைக்கொடுக்குமா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
5வது ஆஷஸ் போட்டியில் வென்று தொடரை 2-2 என சமன் செய்ததற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய பென் ஸ்டோக்ஸிடம் இந்தியாவில் பாஸ்பால் ஆட்டம் கைக்கொடுக்குமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் பேசியிருக்கும் அவர், “நாங்கள் நியூசிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தபோது வெளியில் என்ன பேசினார்கள் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நியூசிலாந்தில் வென்றிருந்தாலும் உங்களால் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக வெல்ல முடியாது என்று கூறினார்கள். பின்னர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக வென்ற பிறகு பாகிஸ்தானுக்கு எதிராகவும், அதற்கு பிறகு ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் வெல்லவே முடியாது என்று கூறினார்கள். தற்போது இந்தியாவுக்கு எதிராக அதைச் செய்ய முடியுமா என்று கேட்கிறீர்கள், யாருக்குத் தெரியும் காலம்தான் பதில் சொல்லும்” என்று கூறியுள்ளார்.
நியூசிலாந்தை 3-0 என வீழ்த்திய பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தது. ஆனால் அவர்களின் பாஸ்பால் ஆட்டம் இறுதியாக இங்கிலாந்து 2-1 என வெல்லவைத்தது. அதேபோல பாகிஸ்தானுக்கு சென்ற இங்கிலாந்து அவர்களை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது இங்கிலாந்து அணி. 2024-ம் ஆண்டு முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடுகிறது. ஹைதராபாத், விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி மற்றும் தர்மசாலா ஆகிய இடங்களில் ஜனவரி 25 முதல் மார்ச் 11 வரை போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. பென் ஸ்டோக்ஸின் இந்த பதிலுக்கு “அஸ்வின் மற்றும் ஜடேஜா காம்பினேசன் இருக்கும்வரை இந்தியாவில் இங்கிலாந்தால் வெல்ல முடியாது” என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இங்கிலாந்து கடைசியாக 2012-13 இல் இந்தியாவில் வென்றது. அப்போது இங்கிலாந்து அணியிடம் குவாலிட்டியான சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தனர். இருப்பினும், கடைசி இரண்டு பயணங்களில் இங்கிலாந்து 4-0 மற்றும் 3-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது.