வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுள்ளது. முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதல் போட்டியில் இலங்கையும் இரண்டாவது போட்டியில் வங்கதேசமும் வெற்றிபெற்றன.
பொதுவாகவே இலங்கை மற்றும் வங்கதேசம் மோதுகிறது என்றால் நாகினி டான்ஸ், டைம் அவுட் விக்கெட் மற்றும் வீரர்கள் மோதல் என கலாட்டாவிற்கு பஞ்சம் இருக்காது. இந்தியா-பாகிஸ்தான், ஆஸ்திரேலியா-இங்கிலாந்துக்கு பிறகு இலங்கை-வங்கதேசம் என்ற ரைவல்ரி பெரிதாக உருவெடுத்துள்ளது.
அந்தவகையில் இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச வீரர் பேட்டிங்கின் போது களநடுவர் அவுட் கொடுத்து மூன்றாவது நடுவர் அதற்கு நாட் அவுட் கொடுக்க, போட்டியில் விளையாடமாட்டோம் என இலங்கை வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து “பந்து பேட்டில் பட்டு சென்றது தெளிவாக தெரிகிறது” என்று நீண்டநேரம் வாக்குவாதம் செய்த இலங்கை வீரர்கள் களநடுவர் நிர்பந்தித்ததால் வேறுவழியின்றி போட்டியில் தொடர்ந்து பங்கேற்றனர்.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி கலாட்டாவுக்கு பஞ்சமில்லாமல் நேற்று நடைபெற்றது.
இரண்டு அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இலங்கை அணி குசால் மெண்டிஸின் 86 ரன்கள் ஆட்டத்தால் 174 ரன்கள் குவித்தது.
பின்னர் விளையாடிய வங்கதேச அணிக்கு எதிராக இலங்கை பவுலர் நுவன் துஷாரா ஹாட் டிரிக் விக்கெட் வீழ்த்த, 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. டி20 தொடரை 2-1 என வென்ற இலங்கை வீரர்கள், வெற்றிக்கு பிறகான ஃபோட்டோசூட்டில் 'Timed Out'செலப்ரேஷன் செய்து வங்கதேச வீரர்களை வெறுப்பேற்றினர்.
இலங்கை வீரர்களின் செலப்ரேஷனால் மகிழ்ச்சியடையாத வங்கதேச அணியின் கேப்டன் ஷாண்டோ, “இலங்கை வீரர்களின் செலப்ரேஷனை பார்க்கும்போது அதை ஆக்ரோஷமாக கையாள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. 'Timed Out' விக்கெட்டிலிருந்து அவர்கள் இன்னும் வெளிவரவில்லை என்று நினைக்கிறேன். கிரிக்கெட் விதிகளுக்குப் புறம்பாக நாங்கள் எதையும் செய்யவில்லை, அதனால் முன்பு நடந்ததிலிருந்து வெளிவந்து நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். அவர்கள் அதை நினைவூட்டி வம்பு செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன், ஆனால் நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை” என்று 3வது போட்டிக்கு பிறகு கூறினார்.
உண்மையில் இலங்கை வீரர்கள் 'Timed Out' செலப்ரேஷனை முதலில் தொடங்கவில்லை, அவர்கள் அதைப்பற்றி நினைக்க கூட இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் அவிஷ்கா பெர்னாண்டோ விக்கெட்டை வீழ்த்திய பிறகு, புலிகளின் வேகப்பந்து வீச்சாளர் ஷோரிஃபுல் இஸ்லாம் 'Timed Out'கொண்டாட்டத்துடன் செலப்ரேஷன் செய்து இலங்கை வீரர்களை வெறுப்பேற்றினார். அதற்கு பின்னர் தான் இலங்கை வீரர்கள் இதை தொடரை வென்றபோது செய்துள்ளனர்.
2023 ஒருநாள் உலகக்கோப்பையின் லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை வீரர்கள் மோதலில், சரியான நேரத்தில் முதல் பந்தை எதிர்கொள்ள களத்திற்கு வர தவறியதற்காக மூத்த ஆல்-ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் ‘டைம்ட் அவுட்’ முறையில் அவுட் செய்யப்பட்டார். அதற்கு பிறகு இந்த மோதல் தொடர்ந்து வருகிறது.