146 ஆண்டுக்கால கிரிக்கெட் வரலாற்றில் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த ஏஞ்சலோ மேத்யூஸ் பற்றிய விவகாரம்தான் தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாகி வருகிறது. இதுகுறித்து வீடியோவுடன் ஆதாரத்தை வெளியிட்டிருந்தார், மேத்யூஸ். இதையடுத்து, அவருக்கு ஆதரவாகவும் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் செய்த செயலுக்கு எதிராகவும் உலக ஜாம்பவான்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இதே மேத்யூஸ் 2014ஆம் ஆண்டு இலங்கை அணி கேப்டனாக இருந்தபோது செய்த ஒரு தவறு தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
2014ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் இருந்தபோது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தது. அப்போது அதிரடி வீரர் பட்லர், பந்துவீச்சாளர் முனையில் நின்றபோது இலங்கை வீரர் சேனநாயக்கேவிடம் மன்கட் முறையில் அவுட் ஆனார். இது அஸ்வின் மன்கட் செய்வதற்கு முன்பு நடந்த சம்பவமாகும். அப்போது, இதுகுறித்து யாரும் அதிகம் பேசியதுகூட கிடையாது.
இதனால் இந்த அவுட் முறையை இலங்கை அணி திரும்பப் பெற வேண்டும் என பட்லர் முறையிட்டார். ஆனால் அப்போது கேப்டனாக இருந்த ஏஞ்சலோ மேத்யூஸ், ”நாங்கள் விதிப்படிதான் செய்தோம். அவுட் கேட்டதைத் திரும்ப பெற முடியாது” என பதிலளித்தார்.
இதை அடுத்து அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 219 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. அப்போது கிரிக்கெட் வீரர் காலிங்வுட், மேத்யூஸ் செய்தது தவறு என்றும் இதுகுறித்து பின்னால் அவர் வருத்தப்படுவார் என்றும் கூறியிருந்தனர். தற்போது 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் மேத்யூஸ்க்கு இதுபோல் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.