இது நியாயமா! ”ரோகித் சர்மாவிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் ஷகிப் அல் ஹசன்”- முன்னாள் வீரர் காட்டம்!

இலங்கை வீரர் மேத்யூஸுக்கு அவுட் வழங்கப்பட்டது குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் முகம்மது கைஃப், வங்கதேச கேப்டனை கடுமையாகச் சாடியுள்ளார்.
மேத்யூஸ், கைஃப்
மேத்யூஸ், கைஃப்ட்விட்டர்
Published on

இலங்கை வீரர் மேத்யூஸ் அவுட் சர்ச்சை

146 ஆண்டுக்கால கிரிக்கெட் வரலாற்றில் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த ஏஞ்சலோ மேத்யூஸ் பற்றிய விவகாரம்தான் தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாகி வருகிறது. இதுகுறித்து வீடியோவுடன் ஆதாரத்தை வெளியிட்டு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார், மேத்யூஸ்.

இதையடுத்து, அவருக்கு ஆதரவாகவும் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் செய்த செயலுக்கு எதிராகவும் உலக ஜாம்பவான்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவற்றுக்கெல்லாம் ஒரே பதிலாய், ‘தாம் விதியின்படியே செயல்பட்டேன்’ எனத் தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார், ஹசன். அதேநேரத்தில் இதுதொடர்பாக நடுவர் ஆட்ரியன் ஹோல்ட் ஸ்டாக்கும் நீண்ட விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

மேத்யூஸ், கைஃப்
146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த மேத்யூஸ்! Timed Out - விதி என்ன?

இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து

என்றாலும், இந்த விவகாரம் நீறுபூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருக்கிறது. தற்போதுகூட இந்த விஷயம் குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஒப்பிட்ட முன்னாள் இந்திய வீரர் முகம்மது கைஃப் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதில் அவர், ”Mankad Out விவகாரத்தில் ரோகித் சர்மாவிடமிருந்து வங்கதேசம் அணியின் கேப்டன் ஷாகிப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கவுகாத்தியில் நடந்த ஒருநாள் போட்டியின்போது, 98 ரன் எடுத்த இலங்கை வீரர் தசுன் ஷனகாவுக்கு எதிராக இந்திய அணி Mankad Out கேட்டது. ஆனால், நல்லெண்ணத்தில் ரோகித் அதனை வாபஸ் பெற்றார். மேலும் அவர், ஷாகிப் செய்த செயல் வெட்கக்கேடானது. ஷாகிப் வெற்றி பெறுவதை நம்ப வேண்டும். ஆனால் இப்படியான நிலையில் வெற்றி பெறக்கூடாது. அது வெட்கக்கேடானது. நாம் அனைவரும் வெற்றி பெறுவதற்காக விளையாடுகிறோம். ஆனால் ஒரு அணியோ அல்லது வீரரோ விக்கெட்டைப் பெறுவதற்கு இத்தகைய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று நான் நினைத்ததில்லை” எனச் சாடியுள்ளார்.

மேத்யூஸ், கைஃப்
ஷகிப் செய்தது சரியா? தவிர்த்து இருக்கலாமா?.. விவாதத்தை கிளப்பிய மேத்யூஸின் ’Timed out’ விக்கெட்!

இலங்கை வீரருக்கு வாய்ப்பு கொடுத்த ரோகித்

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் 10ஆம் தேதி கவுகாத்தியில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், அவ்வணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

எனினும், அவ்வணியின் கேப்டனாக இருந்த தசுன் ஷனகா, இலங்கையை வெற்றிபெற வைப்பதற்காகப் போராடினார். ஆனால், அவரால் முடியவில்லை. எனினும், அன்றைய போட்டியில் தாம் சதம் அடித்தாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம் என விளையாடிக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அவர் 98 ரன்கள் எடுத்திருந்தபோது, முகம்மது ஷமி அவரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். இதுகுறித்து நடுவரிடமும் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நல்லெண்ண அடிப்படையில், ரோகித் சர்மா அந்த மேல்முறையீட்டைத் திரும்பப் பெற்றார். இதையடுத்து, தசுன் ஷனகா அந்தப் போட்டியில் சதம் அடித்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 108 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இதையும் படிக்க: ”கோலி சுயநலமா விளையாடுறார்” - விமர்சித்த முன்னாள் பாக். வீரர்! Thug Reply கொடுத்த மைக்கேல் வாகன்!

ரோகித்தைப் பாராட்டிய ஜெயசூர்யா, மேத்யூஸ்

இதன்மூலம் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் அன்றே பேசப்பட்டது. பலரும் அவரைப் பாராட்டியிருந்தனர். குறிப்பாக முன்னாள் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”ரன் அவுட் மேல்முறையீட்டைத் திரும்பப் பெற்ற ரோகித் சர்மாவின் விளையாட்டுத்திறன்தான் உண்மையான வெற்றி. நான் என் தொப்பியை உங்களுக்குக் கொடுக்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

அதுபோல் அன்றே, இன்றைக்கு அவுட் ஆகி வரலாற்றில் பேசுபொருளாகி இருக்கும் ஏஞ்சலோ மேத்யூஸ் ரோகித்தைப் பாராட்டி இருந்தார். "பல கேப்டன்கள் இதைச் செய்ய மாட்டார்கள். ஆனால் விதி சொன்னாலும் மேல்முறையீட்டை திரும்பப் பெற்றதற்காக @ImRo45 க்கு வாழ்த்துகள்! சிறந்த விளையாட்டுத்திறனை வெளிப்படுத்துகிறது" எனப் பதிவிட்டிருந்தார்.

இதைத்தான், இந்திய வீரர் முகம்மது கைஃப்பும் தற்போது நினைவுப்படுத்தி கருத்து தெரிவித்துள்ளார். அதுபோல் ஏஞ்சலோ மேத்யூஸின் ட்விட்டையும் தற்போது ரசிகர்கள் வங்கதே கேப்டனுக்கு எதிராக வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படிக்க: சர்ச்சைக்குரிய வகையில் அவுட்: ஏஞ்சலோ மேத்யூஸ் விமர்சனமும் ஷகிப் அல் ஹசன் பதிலும்

விராட் கோலி சதத்துக்கு இடையூறு ஏற்படுத்திய வங்கதேசம்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் நடப்பு உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலியை சதம் அடிக்கவிடாமல் பல இடையூறுகளை ஏற்படுத்திய அவ்வணியின் சுயநல வீடியோவையும் இத்துடன் பகிர்ந்து, வங்கதேச அணி குறித்து தவறான விமர்சனங்களையும் வைத்து வருகின்றனர். கடந்த அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய வங்கதேச அணி 256 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி, 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்களை எடுத்து அபார வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் விராட் கோலி சிறப்பாக விளையாடி 97 பந்துகளில் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முன்னதாக, இந்த போட்டியில் 41வது ஓவரின் முடிவில் விராட் 97 ரன்களிலும் கே.எல்.ராகுல் 34 ரன்களிலும் ஆடிக் கொண்டிருந்தனர். இந்திய அணியின் ஸ்கோர் 255 ஆக இருந்தது. இந்திய அணி வெற்றிபெற இன்னும் 2 ரன்களே தேவை எனும் நிலை இருந்தது. அப்போது, வங்காளதேசத்தின் நசீம் அஹமது, தாம் வீசிய 42வது ஓவரின் முதல் பந்தை லெக்சைடில் வீச விராட், தனது கால்களை நகர்த்தி, பந்தை பின்னால் விட்டார். அந்த பந்திற்கு நடுவரே வைடு என அறிவிக்கவில்லை. இது விவாதத்திற்குள்ளானது.

அதாவது, வங்கதேச அணி வீரர்களும், பவுலர்களும் அவரை சதம் அடிக்கவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தபோது, நடுவரே அவருக்கு பெருந்தன்மையாக வைடு எனச் சொல்லாமல் விட்டது விமர்சனத்திற்குள்ளானது. இதனால், ரோகித்தைப்போல், அந்த நடுவரும் போற்றுதலுக்குள்ளானார். இப்படி எல்லாம் கிரிக்கெட்டில் சில நல்ல உள்ளங்கள் இருப்பதைத்தான் வங்கதேச அணி கேப்டனுக்கு ஜாம்பவான்கள் உணர்த்தி வருகின்றனர். அதாவது, விளையாட்டை விளையாட்டாகக் கருதி மனிதநேய மாண்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதே அவர்களுடைய எண்ணமாக இருக்கிறது.

மேத்யூஸ், கைஃப்
என்ன இது வைட் இல்லையா? ஒருவேளை அவரும் ரசிகரா இருப்பாரோ! விராட் கோலி சதம் அடிக்க உதவினாரா அம்பயர்!

கிரிக்கெட்டிற்கு மரியாதை கொடுத்த சச்சின்

இந்த எண்ணத்தை, 24 ஆண்டுக்கால கிரிக்கெட்டில் வைத்திருந்தவர் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் உலகின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர், களத்தில் நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்பதற்கு பெயர்போனவர். கிரிக்கெட் களத்தில் ஆக்ரோஷத்தையும், ஆவேசத்தையும் வெளிப்படுத்தாமல் நல்ல குணத்தால் அனைவரையும் கவர்ந்தவர்.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்file image

நடுவர் அவுட் கொடுத்தால்கூட, அடுத்த நொடி மறுபேச்சின்றி தனது எந்தவிதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் அவரின் தீர்ப்புக்கு மரியாதை கொடுத்து வெளியேறும் பண்பு உடையவர். அதுமட்டுமின்றி, தான் அவுட் என்று தனக்கு தெரிந்தால் அம்பயர் அவுட் கொடுக்கும்வரை காத்திருக்காமல் அவராகவே நடந்து வெளியேறும் அளவிற்கு கிரிக்கெட்டில் அவர் ஒரு ஜென்டில்மேனாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்... 2 முறை சாதனை படைத்த அமெரிக்க வீரர்! யார் இந்த ஜாஸ்கரன் மல்கோத்ரா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com