இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. தொடரில் இந்திய அணி, 8 போட்டிகளிலும் வென்று முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. அதேநேரத்தில் 6 போட்டிகளில் வென்று இரண்டாம் இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா அணியும் அரையிறுதிக்குள் நுழைந்துவிட்ட நிலையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழைய மல்லுக்கட்டி வருகின்றன.
இந்த நிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இடத்துக்கு இன்னும் போட்டி நீடிக்கிறது. இந்த உலகக் கோப்பையில் டாப் 8 இடங்கள் பிடிக்கும் அணிகள்தான் அந்தத் தொடருக்குத் தகுதி பெறும். ஏற்கெனவே 6 அணிகள் அதற்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் இன்னும் கோதாவில் இருக்கின்றன. இப்படியான நெருக்கடியில், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் இன்று உலகக்கோப்பை தொடரின் 38வது லீக் போட்டியில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் ஜெயித்த வங்கதேச அணி, முதலில் இலங்கையை பேட் செய்ய தீர்மானித்தது. அதன்படி, இலங்கை பேட் செய்து வருகிறது. இந்த நிலையில், 24.2 ஓவர்களில் இலங்கை அணி 135 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது. கடைசியாக சதீரா சமரவிக்ரமா விக்கெட்டை இழந்திருந்தார். இவருக்குப் பின் ஏஞ்சலா மேத்யூஸ் களம் இறங்க வேண்டும். அதாவது ஒரு விக்கெட் விழுந்த பிறகு புதிதாக களமிறங்கும் அல்லது ஏற்கெனவே களத்தில் உள்ள வீரர், அடுத்த 2 நிமிடத்திற்குள் களத்திற்குள் பந்தை எதிர்கொள்ள வேண்டும். தவறினால் அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்படும்.
அந்த வகையில் சமரவிக்ரமா ஆட்டமிழந்த பிறகு, மேத்யூஸ் களமிறங்கினார். ஆனால், அவர் அணிந்து வந்த ஹெல்மெட் சரியில்லாததால், மேத்யூஸ் தனது ஹெல்மெட்டை மாற்ற முயன்றார். ஆனால், கிரீஸிற்கு வர மேத்யூஸ் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டதாக வங்கதேச வீரர்கள் முறையிட, அவர் ஆட்டமிழந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். அதாவது, கிரிஸுக்குள் வந்த மேத்யூஸ் மீண்டும் ஹெல்மெட்டை மாற்ற கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் கோரிக்கை விடுத்ததை அடுத்து அவுட் கொடுக்கப்பட்டது.
இதனால் வந்தவேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். இதன்மூலம் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இந்த வகையில் அவுட்டான முதல் சர்வதேச வீரராக ஏஞ்சலோ மேத்யூஸ் இடம்பிடித்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க ஷகிப் அல் ஹசன் செய்தது சரியா தவறா என விவாதமும் தொடங்கியுள்ளது. ஒரு முறை மேத்யூஸ்-க்கு எச்சரிக்கை கொடுத்து ஆடச் செய்து இருக்கலாம் என ஒருதரப்பும் இப்படி ஒரு விதி இருப்பதை நன்கு அறிந்து அதனை சரியான நேரத்தில் ஒரு வீரராக பயன்படுத்தியுள்ளார் அதனால் அவர் செய்தது சரி என ஒரு தரப்பும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இப்படிதான் அஸ்வின் முதன் முறையாக மான்கிட் முறையில் பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்த போது அது விவாதப் பொருளானது. ஆனால், அது விதியில் உள்ளது அதனால் அப்படி செய்வது சரிதான் என ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு பலரும் அதனை கடைபிடிக்க ஆரம்பித்தனர். சில நேரங்களில் பேட்ஸ்மேன்கள் இதேபோல், பேட்டிங்கை துவங்க கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டதுண்டு ஆனால் அத்தகைய நேரங்களில் பந்துவீச்சாளர்கள் இந்த விதியை பயன்படுத்தியதில்லை. அதனால், இதுபோல் யாருக்கும் அவுட் கொடுக்கப்பட்டதில்லை.