இலங்கை அணியின் மிஸ்டிரி ஸ்பின்னருக்கு காயம்! இந்தியாவுடனான இறுதிப்போட்டியில் விளையாடுவது சந்தேகம்!

இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் ஏற்கனவே காயத்தால் விளையாடாமல் இருந்துவரும் நிலையில், தற்போது முக்கியமான சுழற்பந்துவீச்சாளரும் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.
PAK - SL
PAK - SLTwitter
Published on

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆசியக்கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாழ்வா-சாவா போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. அரையிறுதிப்போட்டியாக பார்க்கப்பட்ட இந்தபோட்டி மழையால் 42 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக 252 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிறப்பாக விளையாடிய விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 86 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Asalanka
Asalanka

வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. டாப் ஆர்டர் வீரர்களாக களமிறங்கிய அனைத்து வீரர்களும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக செய்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய விக்கெட் கீப்பர் குசால் மெண்டிஸ் இலங்கையை வெற்றியின் அருகாமைக்கு அழைத்துச்சென்றார். போட்டியின் கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி 33 ரன்கள் இடைவெளியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கைக்கு பயத்தை காட்டியது. 243 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி ஒருகனம் தோல்வியின் விளிம்பிற்கே சென்றது. கடைசி 2 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவையென்ற இடத்தில் அசலங்கா ஸ்லிப் திசையில் பவுண்டரிக்கு அடித்து இலங்கையின் வெற்றியை எளிதாக்கினார். முடிவில் விறுவிறுப்பான போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது. "பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை 11ஆவது முறையாக ஆசியக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது".

காயத்தால் அவதியுற்ற போதும் கடைசிவரை களத்தில் இருந்த மஹீஸ் தீக்‌ஷனா!

இலங்கை அணியின் முக்கிய வீரராகவும், மிஸ்டிரி ஸ்பின்னராகவும் பார்க்கப்படுவர் மஹீஸ் தீக்‌ஷனா. ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலக்கிய தீக்‌ஷனா, இலங்கை அணியிலும் முக்கியமான வீரராக ஜொலித்து வருகிறார். இலங்கை அணியின் பெரிய பலமாக பார்க்கப்படும் தீக்‌ஷனா தற்போது ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டியை தவறவிடும் நிலையில் இருக்கிறார்.

Maheesh Theekshana
Maheesh Theekshana

நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங்கின் போது அவருக்கு காலின் தொடைப்பகுதியில் அடிப்பட்டது. காயத்தால் அவதிப்பட்ட அவர் களத்தை விட்டு வெகுநேரம் வெளியில் இருந்தார். பின்னர் 35ஆவது ஓவரின் போது மீண்டும் களத்திற்கு வந்த தீக்‌ஷனா, கிட்டத்தட்ட ஒரு காலின் உதவியால் மட்டுமே வலியை பொறுத்துக்கொண்டு பந்து வீசினார். ஆனால் வலி அதிகமானதின் காரணமாக வெகுநேரம் அவரால் களத்தில் நிற்க முடியவில்லை. மறுபடியும் மைதானத்தை விட்டு வெளியேறிய அவர் களத்திற்கு திரும்பவே மாட்டார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 39வது ஓவரின் போது மீண்டும் களத்திற்கு வந்த அவர், வலியோடு தன்னுடைய ஓவரை முடித்துவிட்டு சென்றார். இறுதியாக சப்போர்ட் ஸ்டாஃப் இருவரின் உதவியால் கைத்தாங்கலாக அழைத்துச்செல்லப்பட்டார் தீக்‌ஷனா.

ஆசியக்கோப்பையில் இறுதிப்போட்டியில் விளையாடுவது சந்தேகம்!

காயத்தால் பாதிக்கப்பட்ட தீக்‌ஷனாவின் நிலை குறித்து தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இலங்கை, “மஹீஸ் தீக்‌ஷனா தனது வலது தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை முழுமையாக மதிப்பிட நாளை அவருக்கு ஸ்கேன் செய்யப்படும். இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பீல்டிங் செய்யும் போது தீக்ஷனாவுக்கு காயம் ஏற்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Theekshana
Theekshana

நடக்கவே முடியாமல் அவதிப்பட்ட திக்‌ஷனா ஆசியக்கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இலங்கை அணியின் முக்கிய வீரர்களான வனிந்து ஹசரங்கா, துஷ்மந்த சமீரா, லஹிரு மதுஷங்கா மற்றும் லஹிரு குமாரா போன்ற வீரர்கள் காயத்தால் விளையாடாமல் இருந்துவரும் நிலையில், தற்போது தீக்‌ஷனாவும் காயமடைந்திருப்பது இலங்கைக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஆசியக்கோப்பையின் இறுதிப்போட்டியானது செப்டம்பர் 17 ஞாயிறு கிழமையன்று இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே கொழும்புவில் நடைபெறவிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com