இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு 13-வது ஒருநாள் உலகக் கோப்பை ஆடவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19-ம் தேதி வரை உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. போட்டி நடைபெறும் நாட்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டு, பிற காரணங்களுக்காக அது மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் உலகக் கோப்பைக்கு தேர்வான அனைத்து அணிகளும் மிகத்தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டே தங்களது அடுத்தடுத்த ஆட்டங்களை அனைத்து அணிகளும் விளையாடி வருகின்றன. இதற்கிடையே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் உலகக் கோப்பைக்கான தங்களது வீரர்களை அறிவித்துள்ளது.
இதில் இலங்கை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளரான மகேஷ் தீக்ஷனா (உலகக்கோப்பை அணியை இலங்கை இன்னும் அறிவிக்காத நிலையில்), உலகக்கோப்பையில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டி20 போட்டிகளை ஒப்பிடும் போது 50 ஓவர் போட்டிகள் மாறுபட்டது. டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சிங்கிள்ஸ் எடுக்க விரும்புவதில்லை. அப்படி இருக்கும் சூழலில் எனது திட்டம் பேட்ஸ்மேனுக்கு சிங்கிள் கொடுக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.
ஆனால், 50 ஓவர் போட்டிகளில் மிடில் ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்த வேண்டும். 11 ஆவது ஓவர்கள் முதல் 40 ஆவது ஓவர் வரை 4 வீரர்கள் மட்டுமே வெளியில் இருப்பார்கள். அதை பேட்டர்கள் பயன்படுத்த முனைவார்கள் என்பது பந்துவீச்சாளராக உங்களுக்கு தெரியும். அப்போது நீங்கள் விக்கெட்டை வீழ்த்தினால் அது உங்கள் அணிக்கு உதவியாக இருக்கும். இந்தியாவில் விராட்கோலியின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. உலகக் கோப்பையில் அவரது விக்கெட்டை வீழ்த்துவதே எனது விருப்பம்” என தெரிவித்துள்ளார்.
மகேஷ் தீக்ஷனா மொத்தம் 22 ஐபிஎல் போட்டிகளை விளையாடியுள்ளார். அதில் 23 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இலங்கை அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள அவர் 5 விக்கெட்களையும், 22 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ள அவர் 36 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 38 டி20 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்களை வீழ்த்துயுள்ளதும் குறிப்பிடத்தக்கது.