2019 உலகக்கோப்பையை வென்று நடப்பு உலக சாம்பியனாக இருந்துவரும் இங்கிலாந்து அணி, 2023 உலகக்கோப்பையில் தொடர்ந்து சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. முதல் 4 லீக் போட்டிகளில் 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருக்கும் இங்கிலாந்து, 1 போட்டியில் மட்டுமே வெற்றியை பதிவுசெய்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி, தொடர்ச்சியான இரண்டு தோல்விகளுக்கு பிறகு வெற்றியை தேடி இன்று களமிறங்கியது.
5வது லீக் போட்டியில் இலங்கைக்கு எதிராக களமிறங்கிய இங்கிலாந்து அணி, பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூர் மைதானத்தில் முதலில் பேட் செய்தது. நல்ல டாஸ் வென்ற போதும் கூட, இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு எதிராக தாக்குபிடிக்க முடியாத இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது வெளியேறினர். 33.2 ஓவரிலேயே அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 156 ரன்கள் மட்டுமே அடித்தது.
அந்த அணியில் 6 வீரர்கள் ஓரிலக்க ரன்களில் நடையைக்கட்டினர். அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் அடித்தார். இலங்கை அணியில் லஹிரு குமரா 3 விக்கெட்டுகளும், மேத்யூஸ் மற்றும் ரஜிதா இருவரும் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
157 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி விரைவாகவே 2 விக்கெட்டுகளை இழந்தாலும், 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த பதும் நிஷாங்கா மற்றும் சதீரா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி வரை நிலைத்து நின்ற இந்த ஜோடி அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்து அசத்த, 26வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது. 7 பவுண்டரிகள் 2 சிச்கர்கள் விளாசி 77 ரன்களுடன் பதும் நிஷாங்காவும், 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 65 ரன்களுடன் சதீராவும் இறுதிவரை களத்தில் இருந்தனர்.
இந்த போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து 5 போட்டிகளில் 4 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது இங்கிலாந்து. இதன்மூலம் உலகக்கோப்பை அரையிறுதியை எட்டும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது நடப்பு உலக சாம்பியனான இங்கிலாந்து அணி. மீதமிருக்கும் 4 போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை எதிர்த்து விளையாடவிருக்கிறது இங்கிலாந்து. இந்த தோல்வியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 9வதுஇடத்திற்கு சரிந்துள்ளது இங்கிலாந்து. சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய இலங்கை அணி பந்துவீச்சாளர் லஹிரு குமரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.