உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா இலங்கை இடையிலான லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களில் வெளியேற, சுப்மன் கில், விராட் இணை அபாரமாக ஆடியது. இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினர். இருவரும் சதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுப்மன் கில் 92 ரன்களுக்கும், விராட் கோலி 88 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களம் இறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடினார். 56 பந்துகளில் 82 ரன்களைக் குவித்து அவர் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து 357 ரன்களை குவித்தது. இலங்கை தரப்பில் மதுஷங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
358 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் 55 ரன்களுக்குச் சுருண்டது. முதல் பந்திலேயே இலங்கை அணியின் பதும் நிசங்காவை வெளியேற்றிய பும்ரா, உலகக் கோப்பைப் போட்டி ஒன்றில் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
முகம்மது ஷமி அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியாவிற்காக உலகக் கோப்பைப் போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதுவரை அவர் 45 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அடுத்த இடத்தில் உள்ள ஜாஹீர் கான் 44 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இலங்கையின் வீழ்ச்சிக்கு வித்திட்ட அவருக்கே ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
- நேற்றைய போட்டியில் 55 ரன்களில் சுருண்டதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக குறைவான ரன்களில் ஆல் அவுட் ஆன பட்டியலில் இலங்கை அணியே முதல் இரு இடங்களில் உள்ளது.
முன்னதாக இந்தாண்டு கொழும்புவில் நடந்த போட்டியில் அந்த அணி 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்திருந்தது. 2014 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 58 ரன்களுக்கு சுருண்டு பங்களாதேஷ் அணி மூன்றாவது இடத்திலும், 2005 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 65 ரன்களுக்கு சுருண்டு ஜிம்பாவே அணி நான்காவது இடத்திலும் உள்ளது.
- ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பட்டியலில் இந்தியா மீண்டும் இணைந்துள்ளது. முன்னதாக இந்தாண்டு கொழும்புவில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
நெதர்லாந்து உடனான போட்டியில் 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும், ஐக்கிய அமீரகத்திற்கு எதிரான போட்டியில் 304 வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாவே மூன்றாவது இடத்திலும் உள்ளது. நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் நான்காவது இடத்தில் மீண்டும் இணைந்துள்ளது.
- உலகக் கோப்பை போட்டிகளில் full-members team ஒன்று தனது குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இதற்குமுன் மேற்கிந்திய தீவுகள் உடனான போட்டியில் பங்களாதேஷ் அணி 58 ரன்களுக்குள் சுருண்டதே குறைந்தபட்சமாக இருந்தது.
- நேற்று நடந்த போட்டியில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது மூன்றாவது மோசமான ஸ்கோரை இலங்கை பதிவு செய்துள்ளது. 2012 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுடன் நடந்த போட்டியில் அந்த அணி 43 ரன்களுக்கு சுருண்டது. இந்தாண்டு கொழும்புவில் இந்தியா உடனான போட்டியில் 50 ரன்களுக்கு சுருண்டதும் குறிப்பிடத்தக்கது.