பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் 47வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்த விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 13,000 ரன்கள் என்ற மிகப்பெரிய மைல்கல்லை எட்டினார். ஒருநாள் போட்டிகளில் இதுவரை சச்சின் டெண்டுல்கர் (18,426 ரன்கள்), குமார் சங்ககரா (14,234 ரன்கள்), ரிக்கி பாண்டிங் (13,204 ரன்கள்), சனத் ஜெயசூர்யா (13,430 ரன்கள்) என 4 வீரர்கள் 13,000 ரன்களை எட்டியிருக்கும் நிலையில், கோலி இந்த மைல்கல்லை 5ஆவது வீரராக எட்டினார்.
13,000 ரன்கள் என்ற மிகப்பெரிய மைல்கல் சாதனையை குறைவான இன்னிங்ஸ்களில் எட்டிய கோலி, சச்சினை பின்னுக்கு தள்ளி புதிய உலக சாதனையை தன்னுடைய பெயரில் எழுதினார். 267 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை விராட் கோலி படைத்திருக்கும் நிலையில், சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்ஸ்கள், ரிக்கி பாண்டிங் 341, சங்ககரா 363 மற்றும் ஜெயசூர்யா 416 இன்னிங்ஸ்கள் என அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.
2023 ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ், ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்தார். 20 வருடங்களுக்கு முன் 2003ஆம் ஆண்டு சமிந்தா வாஸ் இதே சாதனையை முதல் வீரராக படைத்திருந்தார்.
20 வருடங்களாக அசைக்க முடியாமல் இருந்த உலக சாதனையை தற்போது முகமது சிராஜ் சமன் செய்து அசத்தியுள்ளார். மேலும் 1002 பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் சிராஜ், குறைவான பந்துகளில் 50 ஒருநாள் விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். முதலிடத்தில் இலங்கை வீரர் அஜந்தா மெண்டிஸ் நீடிக்கிறார்.
ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் ஷமிம் ஹொசைன் விக்கெட்டை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா, ஒருநாள் கிரிக்கெட்டில் 200வது விக்கெட்டை பதிவு செய்தார். ODI-ல் 200 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர்கள் வரிசையில் அனில் கும்ப்ளே (337 விக்கெட்டுகள்), ஜவகல் ஸ்ரீநாத் (315), அஜித் அகர்கர் (288), ஷகீர் கான் (282), ஹர்பஜன் சிங் (269), கபில் தேவ் (253) முதலிய 6 வீரர்களுக்கு பிறகு 7வது வீரராக இச்சாதனையை செய்துள்ளார்.
இத்துடன் ஆல்ரவுண்டராக கபில்தேவ் படைத்த பிரத்யேக சாதனையில் தன்னை இணைத்துக்கொண்டார் ஜடேஜா. ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஒரே இந்திய பவுலர் கபில்தேவ் மட்டும் தான். இந்த தனித்துவமான சாதனையில் 200 விக்கெட்டுகள் மற்றும் 2578 ரன்களுடன் இரண்டாவது வீரராக இணைத்து அசத்தியுள்ளார் ஜட்டு.
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மெஹிதி ஹாசனின் கேட்சை எடுத்த ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் 200வது கேட்ச்சை பதிவு செய்தார். 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்கள் வரிசையில் ராகுல் டிராவிட் (334), விராட் கோலி (303), அசாருதின் (261), சச்சின் டெண்டுல்கர் (256) முதலிய வீரர்களுக்கு பிறகு 5வது வீரராக ரோகித் சர்மா இணைந்துள்ளார்.
மேலும் தற்போது விளையாடிவரும் வீரர்கள் வரிசையில் கோலி (303), ஸ்டீவ் ஸ்மித் (288), ஜோ ரூட் (280), டேவிட் வார்னர் (203) முதலிய வீரர்களுடன் ரோகித் சர்மாவும் இணைந்துள்ளார். தற்போது விளையாடிவரும் வீரர்கள் பட்டியலில் ஒரே நாட்டைச்சேர்ந்த இரண்டு வீரர்கள் இருப்பது இந்தியாவில்தான். அவ்விருவர் கோலி மற்றும் ரோகித் சர்மா.
2023 ஆசியக்கோப்பை தொடரில் தன்னுடைய 5வது ஒருநாள் சதத்தை பதிவு செய்த சுப்மன் கில், இந்த வருடத்தில் மட்டும் தன்னுடைய 4வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய 121 ரன்கள் சதம் மற்றும் 2 அரைசதங்களை சேர்த்து தொடரில் 302 ரன்களை குவித்துள்ளார். இத்தொடரில் 300 ரன்களை குவித்த ஒரே வீரர் சுப்மன் கில் மட்டும் தான். அந்த வரிசையில் 270 ரன்களுடன் குசால் மெண்டீஸ், 215 ரன்களுடன் சமர்விக்ரமா, 207 ரன்களுடன் பாபர் அசாம், 195 ரன்களுடன் முகமது ரிஸ்வான் என அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றனர்.