தியோதர் டிராபி ஃபைனலில் கிழக்கு மண்டல அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மயாங்க் அகர்வால் தலைமையிலான தெற்கு மண்டல அணி. ரோஹன் குன்னம்மல் சதமடித்து அசத்த, பந்துவீச்சில் தமிழக ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இந்திய கிரிக்கெட்டின் முக்கிய உள்ளூர் தொடர் தியோதர் டிராஃபி. 50 ஓவர் போட்டியான இது, மண்டல வாரியான அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டுவருகிறது. 1973-74 சீசன் முதல் நடந்துவரும் இந்தத் தொடர் முன்னாள் இந்திய முதல்தர வீரர் தினகர் பல்வந்த் தியோதர் நினைவாக விளையாடப்படுகிறது. புனேவில் பிறந்தவரான அவர் 1911 முதல் 1948 வரை முதல் தர போட்டிகளில் விளையாடினார். இந்திய கிரிக்கெட்டின் கிராண்ட் ஓல்ட் மேன் எனப்படும் அவர், மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோஷியேஷன் தலைவராகவும், இந்திய அணியின் தேர்வுக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டிருக்கிறார்.
2023 தியோதர் டிராபி தொடர் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 3 வரை பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இத்தொடரில் 6 மண்டலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற 5 அணிகளோடு ஒரு முறை மோதின. ஒவ்வொரு வெற்றிக்கும் 4 புள்ளிகள் வழங்கப்படும். லீக் சுற்றின் முடிவில் முதலிரு இடங்களில் இருக்கும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
மத்திய மண்டலம் - வெங்கடேஷ் ஐயர்
கிழக்கு மண்டலம் - சௌரப் திவாரி
வடக்கு மண்டலம் - நித்திஷ் ராணா
வடகிழக்கு மண்டலம் - லாங்லோயன்பா கெய்ஷாங்பாம்
தெற்கு மண்டலம் - மயாங்க் அகர்வால்
மேற்கு மண்டலம் - பிரியாங் பஞ்சால்
இந்த ஆறு அணிகளின் ஸ்குவாடுகளையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை 13ம் தேதி அறிவித்தது. அதில் 5 தமிழக வீரர்கள் இடம்பெற்றனர்.
தெற்கு மண்டல அணியில் இடம்பெற்ற தமிழக வீரர்கள்
கே.பி.அருண் கார்த்திக் - விக்கெட் கீப்பர்
சாய் சுதர்ஷன் - பேட்ஸ்மேன்
நாராயண் ஜெகதீசன் - விக்கெட் கீப்பர்
வாஷிங்டன் சுந்தர் - ஆல் ரவுண்டர்
ஆர். சாய்கிஷோர் - சுழற்பந்துவீச்சாளர்
லீக் சுற்றின் முடிவில் தெற்கு மண்டல அணியும், கிழக்க மண்டல அணியும் புள்ளிப் பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன. தெற்கு மண்டல அணி விளையாடிய 5 போட்டிகளிலுமே வென்று அசத்தியது. கிழக்க மண்டல அணி தெற்கு மண்டலத்துக்கு எதிரான போட்டியைத் தவிர்த்து மற்ற 4 போட்டிகளையும் வென்றது. இத்தொடரின் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 3ம் தேதி நடந்தது.
டாஸ் வென்ற தெற்கு மண்டல அணியின் கேப்டன் மயாங்க் அகர்வால் பேட்டிங் தேர்வு செய்தார். ஓப்பனராக களமிறங்கிய கேப்டன் அகர்வாலோடு இணைந்து மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்தார் கேரள பேட்ஸ்மேன் ரோஹன் குன்னம்மல். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 24.4 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தனர். 75 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ரோஹன். கேப்டன் மயாங்க் 63 ரன்கள் வெளியேறினார். அதன்பிறகு தமிழக பேட்ஸ்மேன் ஜெகதீசன் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடி அரைசதம் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் வெளியேற 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்தது தெற்கு மண்டலம்.
மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த கிழக்கு மண்டல அணி 14 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. டாப் ஆர்டர் சரிந்தாலும் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஓரளவு போராடினார்கள். முக்கியமாக அசாமின் ரியான் பராக் அதிரடியாக ஆடி அந்த அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். அவர் 65 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 46.1 ஓவர்களில் 283 ரன்களுக்கு கிழக்கு மண்டல அணி ஆல் அவுட் ஆனது. அதனால் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது தெற்கு மண்டல அணி. தமிழக ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
டாப் ரன் ஸ்கோரர்: ரியான் பராக், கிழக்கு மண்டலம் - 354 ரன்கள்
டாப் விக்கெட் டேக்கர்: வித்வேத் கவரப்பா, தெற்கு மண்டலம் - 13 விக்கெட்டுகள்
தொடர் நாயகன்: ரியான் பராக்