தென்னாப்பிரிக்கா என்றாலே கிரிக்கெட் அரங்கில் சொதப்பும் அணி என்ற பெயர் தான் இருக்கிறது. ஆரம்பத்தில் அமர்க்களப்படுத்துபவர்கள் கடைசி கட்டத்தில் சொதப்பிவிடுவார்கள். ஒரு உலகக் கோப்பையாவது வென்று விடுவார்களா என்று எதிர்பார்த்தால், இறுதிப் போட்டிக்கே போகாமல் சொதப்பிவிடுவார்கள். ஆனால் 2015 உலகக் கோப்பை வேறு விதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது அதற்கான நம்பிக்கையையும் விதைத்தது தென்னாப்பிரிக்க அணி.
மிகவும் பலமாக இருந்த தென்னாப்பிரிக்க அணி, அந்த உலகக் கோப்பையில் அசத்தியது. லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக தோற்றிருந்தாலும் மற்ற போட்டிகளில் மிரட்டியது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக 339 ரன்கள் குவித்த அந்த அணி, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளுக்கு எதிராக 400 ரன்களைக் கடந்தது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராகவும் 341 ரன்கள் குவித்தது. லீக் சுற்றில் சேஸ் செய்த இரண்டு போட்டிகளில் தான் தோற்றது. ஆனால் முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில் ரன் மழையாகப் பொழிந்தது. அந்த அணியின் பேட்டிங் அவ்வளவு பலமாக இருந்தது.
காலிறுதியில் இலங்கை முதலில் பேட்டிங் செய்தாலும் அந்த அணியை 133 ரன்களுக்கு அவுட்டாக்கி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது அந்த அணி. அடுத்ததாக ஆக்லாந்தில் நடந்த அரையிறுதியில் நியூசிலாந்தை சந்தித்தது டி வில்லியர்ஸின் அணி. எப்படியும் இந்த உலகக் கோப்பையில் அவர்கள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது.
டாஸ் வென்ற கேப்டன் டி வில்லியர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஓப்பனர்கள் ஹஷிம் அம்லா, குவின்டன் டி காக் இருவரையும் டிரென்ட் போல்ட் வெளியேற்றிவிட ஃபாஃப் டுப்ளெஸி மற்றும் ரைலி ரூஸோ இருவரும் நிதானமாக ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். ரைலி ரூஸோ ஆட்டமிழந்ததும் களமிறங்கிய டி வில்லியர்ஸ் ஓரளவு அதிரடி காட்டினார். ஆனால் வழக்கம்போல் மழை அவர்கள் ஆட்டத்தைக் குறுக்கிட்டது. 38 ஓவர்கள் முடிவில் அந்த அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. அதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் மீண்டும் போட்டி தொடங்கியபோது 43 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது.
ஆட்டம் மீண்டும் தொடங்கியதும் இரண்டாவது பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார் டுப்ளெஸி. ஆனால் அதன்பிறகு களமிறங்கிய டேவிட் மில்லர், டி வில்லியர்ஸுடன் இணைந்து அதிரடி காட்டினார். 43 ஓவர்கள் முடிவில் 281 ரன்கள் குவித்தது அந்த அணி. DLS முறைப்படி நியூசிலாந்து அணிக்கு 299 என்ற இலக்கு டார்கெட்டாக நிர்ணயிக்கப்பட்டது.
கேப்டன் பிரண்டன் மெக்கல்லம், மார்டின் கப்தில் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. 6 ஓவர்களிலேயே அவர்கள் 71 ரன்கள் எடுத்தனர். அவர்கள் இருவரும் அவுட்டான பின் அடுத்தடுத்த சில விக்கெட்டுகள் விழத் தொடங்கின. தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று விடுமோ என்று நினைத்தபோதுதான் அந்த அணிக்கு எமனாய் வந்து நின்றார் கிரான்ட் எலியாட். நிதானமாக அணியை சரிவிலிருந்து மீட்ட அவர், அதிரடி காட்டி அணியை இலக்கை நோக்கி அழைத்துச் சென்றார். அவருக்குக் கோரி ஆண்டர்சனும் பக்க பலமாக இருக்க, டார்கெட்டை நோக்கி விரைந்தது அந்த அணி. இருந்தாலும் மோர்னெ மோர்கல், டேல் ஸ்டெய்ன் இருவரும் விக்கெட்டுகள் வீழ்த்தி போட்டியை பரபரப்பாக்கினர்.
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்டெய்ன் முதல் இரண்டு பந்துகளிலும் சேர்த்து 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 4 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் மூன்றாவது பந்தில் பௌண்டரி அடித்தார் வெட்டோரி. அடுத்த பந்தில் அவர் ஒரு ரன் எடுக்க, 2 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஐந்தாவது பந்தை சிக்ஸருக்கு விளாசி எலியாட் நியூசிலாந்து அணியை வெற்றி பெறவைத்தார்.
ஒட்டுமொத்த உலகத்தின் ஃபேவரிட்டாக இருந்த தென்னாப்பிரிக்க அணி தோற்க, அந்த வீரர்கள் மனமுடைந்து கண்ணீர் மல்க மைதானத்தில் அமர்ந்திருந்த காட்சி அனைவரையும் உலுக்கியது. அதை விட பெரும் ஏமாற்றமாக இருந்தது தென்னாப்பிரிக்காவை வெளியேற்றிய எலியாட் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் என்பதுதான். 2001ம் ஆண்டு வரை தென்னாப்பிரிக்காவில் இருந்த அவர், தென்னாப்பிரிக்க ஏ அணிக்காகவும் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். அதன்பிறகு தான் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்து அங்கு கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். தென்னாப்பிரிக்காவில் பிறந்த ஒருவரே தென்னாப்பிரிக்காவை வெளியேற்றியது அந்த நாட்டு ரசிகர்களுக்கு இன்னும் சோகமாக அமைந்தது.