2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான ஸ்குவாடுகளை ஒவ்வொரு அணிகளும் அறிவித்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவின் 15 பேர் கொண்ட முதல் கட்ட அணி செவ்வாய்க்கிழமை (நேற்று) அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் அணியும் அறிவித்திருக்கிறது.
டெம்பா பவுமா தலைமையிலான இந்த அணியில் அனுபவ வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், வேண்ட் டெர் டுசன், மில்லர், டி காக், கிளாசன், மார்க்ரம் என வரிசை கட்டும் அந்த அணியின் பேட்ஸ்மேன்களில் யாரை வெளியே அமரவைப்பது என்பதே தென்னாப்பிரிக்க அணிக்கு மிகப் பெரிய தலைவலியாக இருக்கும். இவர்கள் அனைவருமே அனுபவம் மிக்கவர்கள் என்பதோடு, இந்திய ஆடுகளங்களை சமாளிக்கவும் தெரிந்தவர்கள்.
பேட்டிங் பலமாக இருக்கிறதென்றால், அந்த அணியின் வேகப்பந்துவீச்சு இன்னும் பலமாக இருக்கிறது. ரபாடா, யான்சன், எங்கிடி, நார்கியா என்று ஐபிஎல் அரங்கில் அசத்திய புயல் வேக பௌலர்கள் இந்த உலகக் கோப்பையிலும் கலக்க காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு பேக் அப் ஆக மகாலா, கொட்சியா ஆகியோரும் இடம்பெற்றிருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவின் SA20 தொடரில் ஜோஹன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய கொட்சியா இரண்டே ஒருநாள் போட்டிகளில் தான் ஆடியிருக்கிறார். இருந்தாலும் அவரது வேகத்தையும், விக்கெட் எடுக்கும் திறனையும் நம்பி வாய்ப்பு கொடுத்திருக்கிறது அந்த அணியின் நிர்வாகம்.
அந்த அணியின் பலவீனமாகக் கருதப்படுவது அவர்களின் சுழற்பந்துவீச்சு தான். ஷம்ஸி, மஹாராஜ் என இரு அனுபவ வீரர்கள் இடம்பெற்றிருந்தாலும், அவர்கள் இந்திய ஆடுகளங்களைப் பயன்படுத்தி விக்கெட் வேட்டை நடத்தக் கூடியவர்கள் அல்ல. இது மட்டும் அந்த அணியை பாதிக்கலாம். அதில் மஹாராஜ் இப்போதுதான் காயத்திலிருந்து மீண்டிருக்கிறார். அவர் அணியில் இடம்பெறுவதே சந்தேகம் என்று கருதப்பட்டது.
இந்நிலையில், "நாங்கள் எந்தத் தருணத்திலும் 4 வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து எதிரணிகளை மிரட்டத் திட்டமிட்டிருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார் தென்னாப்பிரிக்க அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர். அதனால் அந்த அணி எப்படியும் ஒரு ஸ்பின்னரோடு தான் களமிறங்கும். அதேசமயம் அந்த அணியின் ஆல் ரவுண்டரான மார்கோ யான்சனுக்கு சரியான பேக் அப் இல்லை. ஒருவேளை அவர் காயமடைந்தால் அந்த அணியின் காம்பினேஷன் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படலாம். இந்த இரு விஷயங்கள் தவிர்த்து அந்த அணி பலமானதாகவே இருக்கிறது. இந்திய ஆடுகளங்களுக்கு நன்கு பழக்கப்பட்ட பல வீரர்கள் இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம்.
கடந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி 9 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. 7 புள்ளிகளோடு முடித்த அந்த அணி ஏழாவது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்திருந்தது. இந்த முறை நிச்சயம் அந்த அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி கோதாவில் நிலைத்திருக்க விரும்பும். அதற்கான ஒரு அணி அவர்களிடம் இருக்கிறது.
தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பை ஸ்குவாட் :
பேட்ஸ்மேன்கள்: டெம்பா பவுமா (கேப்டன்), ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், ரஸீ வேன் டெர் டுசன், டேவிட் மில்லர்
விக்கெட் கீப்பர்கள்: குவின்டன் டி காக், ஹெய்ன்ரிச் கிளாசன்
ஆல்ரவுண்டர்கள்: எய்டன் மார்க்ரம், மார்கோ யான்சன்
வேகப்பந்துவீச்சாளர்கள்: ககிஸோ ரபாடா, லுங்கி எங்கிடி, எய்ன்ரிச் நார்கியா, சிசாண்டா மகாலா, ஜெரால்ட் கொட்சியா
ஸ்பின்னர்கள்: கேஷவ் மஹாராஜ், தப்ராய்ஸ் ஷம்ஸி