WC2023: அதிர்ஷ்டமில்ல.. ஆனால்? உலகக்கோப்பையிலும் ODIயிலும் சம்பவம் செய்யும் தென்னாப்பிரிக்கா அணி!

உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த அணியாக தென்னாப்பிரிக்கா சாதனை படைத்துள்ளது.
south africa
south africatwitter
Published on

உலகக்கோப்பையில் சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா அணி

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரால் ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர். அதற்குக் காரணம், பல பேட்டர்கள் படைக்கும் சாதனைகள்தான். தொடக்கப் போட்டியில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா 96 பந்துகளில் 123 ரன்களைக் குவித்து வெற்றிக்கு வித்திட்டதுடன், சாதனையையும் படைத்தார். மேலும், ஒரேநாளில் உலக ஊடகங்கள் அனைத்திலும் இடம்பிடித்தார்.

ரச்சின் ரவீந்திரா
ரச்சின் ரவீந்திராTwitter

இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான இன்றைய (அக்.7) போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 2015 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா 417 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. அதை, தென்னாப்பிரிக்கா அணி இன்று முறியடித்துள்ளது.

இதையும் படிக்க: ’காவி’க்கு மாறிய இந்திய வீரர்கள்! - கன்பியூஸ் ஆன ரசிகர்கள்!

உலகக்கோப்பை: குறைந்த பந்துகளில் சதமடித்த மார்க்ரம்

இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி, இலங்கை பந்துவீச்சைச் சிதறடித்ததுடன், அவ்வணியைச் சேர்ந்த 3 பேர் சதமடித்தனர். டிகாக் 84 பந்துகளில் 100 ரன்களையும், ரஸ்ஸி வான் டர் டஸ்ஸன் 110 பந்துகளில் 108 ரன்களையும், மார்க்ரம் 54 பந்துகளில் 106 ரன்களையும் எடுத்தனர்.

இந்த மூவரும் எடுத்த சதங்களால், உலகக்கோப்பையில் ஓர் இன்னிங்ஸில் அதிக சதங்கள் அடித்த அணியாகவும் தென்னாப்பிரிக்கா சாதனை படைத்துள்ளது. ஏற்கெனவே, அவ்வணி ஒருநாள் போட்டிகளில் 2 முறை 400-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த இன்னிங்ஸ்களிலும் இதேபோன்று 3 வீரர்கள் சதமடித்து அசத்தியுள்ளனர். ஆக மொத்தம் அவர்கள் இதேபோன்று 3 முறை( இன்றைய உலகக்கோப்பை சாதனையையும் சேர்த்து) சாதனை படைத்துள்ளனர்.

இதில் மார்க்ரம் 49 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் உலகக்கோப்பையில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

மார்க்ரம்
மார்க்ரம்ட்விட்டர்

இதற்குமுன்பு, அயர்லாந்து வீரர் ஓபிரையன், கடந்த 2011-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 50 பந்துகளில் சதம் அடித்திருந்திருந்தார். அதேநேரத்தில், ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் சதமடித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவர் படைத்த இந்த சாதனை இன்றுவரை தொடர்கிறது.

பின்னர் வந்த வீரர்களும் சிறப்பாக விளையாட தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் குவித்தது. இதன்மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த அணியாகவும், உலகக்கோப்பையிலேயே அதிக ரன்கள் குவித்த அணியாகவும் வலம் வருகிறது.

உலகக்கோப்பையில் அதிகபட்ச ரன்கள்!

மேலும் தென்னாப்பிரிக்கா அணி மட்டும்தான் உலகக்கோப்பை தொடர்களில் அதிக முறை 400-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளது. இதுவரை அவ்வணி 3 முறை எடுத்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையின்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 5 விக்கெட் இழப்புக்கு 408 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து அதே தொடரில் அயர்லாந்துக்கு எதிராக 4 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்தது. தற்போது இலங்கைக்கு எதிராக இன்றைய போட்டியில் 428 ரன்கள் குவித்துள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்கா: தாயால் வீட்டைவிட்டு விரட்டப்பட்ட 5 வயது சிறுமி.. முகாமில் தங்கியபோது நேர்ந்த கொடூரம்!

இந்தியா வசம் இருந்த 8 ஆண்டு சாதனை!

முன்னதாக, உலகக்கோப்பை தொடரில் அதிகபட்ச ரன்களைக் குவித்த அணியாக, அதிலும் முதல்முறையாக 400 ரன்களைக் குவித்த அணியாக இந்தியா மட்டுமே விளங்கிவந்தது. 2007-ஆம் ஆண்டு உலகக்கோப்பையின்போது இந்திய அணி பெர்முடாவுக்கு எதிராக 5 விக்கெட் இழப்புகு 413 ரன்கள் எடுத்தது. இந்த ரன்கள்தான் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாய்ச் சாதனையாக வலம்வந்தது. இந்தச் சாதனையைத்தான் ஆஸ்திரேலிய அணி 2015-ல் தகர்த்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 417 ரன்களைக் குவித்து உலகக்கோப்பையில் அதிகபட்ச ரன்கள் குவித்த அணியாக இதுவரை வலம் வந்தது.

ஆஸ்திரேலியா முறியடிப்பு: மீண்டும் தொடர்ந்த 8 ஆண்டு சாதனை!

அதுவும், 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தென்னாப்பிரிக்கா அணியால் முறியடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தென்னாப்பிரிக்கா அணி, 2015-ல் இரண்டு முறை 400 ரன்களைக் கடந்திருந்தாலும், இந்தியா (413) மற்றும் ஆஸ்திரேலியா (417) நிகழ்த்தியிருந்த சாதனையை அப்போது முறியடிக்க முடியவில்லை. காரணம், அவ்வணிகளைவிட தென்னாப்பிரிக்கா அணி (408 மற்றும் 411) குறைந்த ரன்களையே எடுத்திருந்தது.

இதையும் படிக்க: கென்யா: திடீரென செயலிழந்த கால்கள்.. மர்ம நோய் தாக்குதலால் பாதிப்புக்குள்ளான 100 பள்ளிச் சிறுமிகள்!

உலகக்கோப்பையிலும் ODIயிலும் சாதனை செய்யும் தென்னாப்பிரிக்கா அணி!

உலகக்கோப்பையை இதுவரை ஒருமுறை வெல்லாத, அதிர்ஷ்டமில்லாத அணியாக தென்னாப்பிரிக்கா விளங்கினாலும் உலகக்கோப்பை மற்றும் இதர ஒருநாள் போட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட ரன்களில் பல சரித்திர சாதனைகளை அவ்வணி நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் அந்த அணி, இதுவரை 8 முறை (உலகக்கோப்பை சேர்த்து) 400க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காட்விட்டர்

இதற்கடுத்து இந்திய அணி 6 முறையும், இங்கிலாந்து 5 முறையும் எடுத்துள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் தலா 2 முறை எடுத்துள்ளன. இதில் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி அதிகபட்சமாக மேற்கிந்திய தீவுக்கு எதிராக 439 ரன்களைக் குவித்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிராக 438 ரன்களை எடுத்துள்ளது.

இதையும் படிக்க: 20 நிமிடங்களில் 5,000 ஏவுகணைகள்... இஸ்ரேலைச் சிதைத்த பாலஸ்தீன ஆயுதக்குழு! போர் பதற்றம் அதிகரிப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com