தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. டி20 தொடரில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 1-1 என தொடரை சமன் செய்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. இந்நிலையில் முன்பு வாங்கிய அடிக்கு தற்போது பதிலடி கொடுக்குமா இந்தியா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், இன்று ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் அர்ஷ்தீப் சிங். 2வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் தொடக்க வீரர் ஹென்ரிக்ஸை போல்டாக்கி 0 ரன்னில் வெளியேற்றியது மட்டுமில்லாமல், அடுத்து களத்திற்கு வந்த டஸ்ஸெனையும் கோல்டன் டக்கில் வெளியேற்றி அடிக்கு மேல் அடி கொடுத்தார். 3 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா தடுமாற, அடுத்து ஜோடி சேர்ந்த டோனி டே மற்றும் கேப்டன் மார்க்ரம் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர்.
ஆனால் இந்த ஜோடியை அதிக நேரம் நிலைத்து நிற்க அனுமதிக்காத அர்ஷ்தீப் சிங், இந்தமுறை டோனி டேவை 28 ரன்களில் வெளியேற்றினார். தொடர்ந்து களத்திற்கு வந்த க்ளாசனை 6 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றிய அர்ஷ்தீப் சிங், பாதி தென்னாப்பிரிக்கா அணியை தனியொரு ஆளாக வெளியேற்றி திணறவைத்தார். விக்கெட்டுகள் விழுந்தாலும் ஒருபுறம் அணிக்காக எய்டன் மார்க்ரம் போராடினார். ஆனால் அடுத்து பந்துவீச வந்த ஆவேஷ் கான் அடுத்தடுத்து மார்க்ரம், மல்டர் மற்றும் மில்லர் என அனைவரையும் வெளியேற்ற தென்னாப்பிரிக்கா அணி ஆட்டம் கண்டது. கடைசி விக்கெட்டுக்கு டெய்ல் எண்டர்கள் சில ஷாட்களை அடித்தாலும், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணியால் 116 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
சிறப்பாக பந்துவீசிய அர்ஸ்தீப் சிங் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா அணி பதிவுசெய்த மிகக்குறைவான டோட்டல் இதுவாகும்.
117 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர், சுதர்ஷன் ஜோடி விளையாடி வருகிறது.