தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸுடன் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, தொடரில் தென்னாப்பிரிக்கா 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி, இன்று (ஜன.3) கேப்டவுன் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்கா, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. ஆனால், இன்றைய துரதிர்ஷ்டம் அந்த அணி, வாழ்நாளில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு மிக மோசமான வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தமானது. ஆம், ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியில் அவ்வணி பந்துவீச்சாளர்களிடம் நிலைகுலைந்த இந்திய அணி பேட்டர்கள், இன்று அதற்குப் பழிதீர்த்தனர். அதுவும் அவர்களுடைய சொந்த மண்ணிலேயே பழிதீர்த்தனர்.
குறிப்பாக, துல்லிய தாக்குதல் நடத்திய முகம்மது சிராஜ் தொடக்க பேட்டர்களின் விக்கெட்களை வீழ்த்தி, வந்தவேகத்திலேயே பெவிலியனுக்கு அனுப்பினார். முக்கியமாக மார்க்ரம் (3), கேப்டன் எல்கர் (4), டோனி (2) ஆகியோரை வீழ்த்தினார். மறுபுறம், அவருக்குத் துணையாக பும்ராவும் ஸ்ட்ப்ஸை 3 ரன்களில் வெளியேற்றினார். பின்னர், சிறிதுநேரம் விளையாடிய பெடிங்னாம் (12), விக்கெட் கீப்பர் வெரின் (15) மற்றும் மார்கோ ஜான்சன் (0) ஆகியோரையும் அடுத்தடுத்து வீழ்த்தி ரசிகர்களின் ஆதரவையும், அணியினரின் பாராட்டையும் பெற்றார். இறுதியில் மகாராஜ் (3), ரபடா (5) ஆகியோரை முகேஷ் குமார் வீழ்த்த, பும்ரா கடைசி விக்கெட்டாக பர்கரை (4) வீழ்த்தி அவ்வணியின் முதல் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டுவந்தார். முடிவில் அவ்வணி 23.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து சொந்த மண்ணில் சாதனை படைத்தது.
இதில், முகமது சிராஜ் 9 ஓவர்கள் வீசி அதில் 3 ஓவர்களை மெய்டனாக்கியதுடன் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 6 விக்கெட்களை அறுவடை செய்தார். பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதில் உணவு இடைவேளைக்கு முன்பே சிராஜ் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்குச் சுருண்டதன் மூலம் ஒருசில சாதனைகளையும் படைத்தது. அந்த வகையில் இன்று 55 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன் மூலம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் மிகக் குறைந்த ரன்னில் ஆட்டமிழந்த அணியாக தென்னாப்பிரிக்கா புதிய சாதனையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன்பு 2021ஆம் ஆண்டு மும்பையில் நியூசிலாந்து அணி 62 ரன்களில் ஆட்டமிழந்ததே சாதனையாக இருந்தது.
இன்றைய போட்டியில் முகம்மது சிராஜ் 6 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அம்மண்ணில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இணைந்தார். இதற்குமுன்பு ஹர்பஜன் சிங் (2011), ஷர்துல் தாக்கூர் (2022) ஆகியோர் தலா 7 விக்கெட்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளனர். 2வது இடத்தில் அனில் கும்ப்ளே (1992), ஜவஹல் ஸ்ரீநாத் (2001), ரவீந்திர ஜடேஜா (2013) ஆகியோருடன் முகம்மது சிராஜ் (2024) இணைந்தார். தவிர, குறைந்த ரன்களை மட்டும் கொடுத்து அதிக விக்கெட்களை வீழ்த்திய பட்டியலிலும் முகம்மது சிராஜ் முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டார். 1990இல் இலங்கைக்கு எதிராக வெங்கடபதி ராஜ் 12 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்கள் எடுத்துள்ளார். முகம்மது சிராஜ், இன்று 15 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்கள் எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் 1955ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சுபாஷ் குப்தா 18 ரன்களுக்கு 5 விக்கெட்களையும், 2006இல் ஹர்பஜன் சிங் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 13 ரன்களுக்கு 5 விக்கெட்களையும், 2019இல் ஜஸ்ப்ரீத் பும்ரா அதே மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக வெறும் 7 ரன்களுக்கு 5 விக்கெட்களையும் எடுத்துள்ளனர்.