ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு சீசன்களில் 900 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர், 2000 ரன்களுக்கு மேல் அடித்து அதிக சராசரி (82.23) வைத்திருந்த வீரர்களில் டான் பிராட்மேனுக்கு அடுத்த வீரர், ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சராசரி (154) வைத்திருந்த 2வது வீரர், ஜோ ரூட்டுக்கு பிறகு முதல்தர கிரிக்கெட்டில் 6 முறை 150 ரன்கள் அடித்த வீரர் என சாதனைகளுக்கு மேல் சாதனைகளாக குவித்தாலும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு மட்டும் அவ்வளவு எளிதில் சர்ஃபராஸ் கானுக்கு கிடைத்துவிடவில்லை.
மூன்று சீசன்களாக ரஞ்சிக்கோப்பையின் நம்பர் 1 வீரராக ஜொலித்த போதும் இந்திய அணியில் இடம் கிடைக்காததால், இரவெல்லாம் அழுததாக பொதுவெளியில் வெளிப்படுத்தினார் சர்ஃபராஸ் கான். ஆனாலும் இதற்கு முன் இருந்த தேர்வுக்குழு சர்ஃபராஸ் கானின் நடத்தையையும், உடல் பருமனையும் குற்றஞ்சாட்டியது. ஆனால் ரசிகர்களும், சுனில் கவாஸ்கர், டி வில்லியர்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிய கிரிக்கெட் வீரர்களின் ஆதரவும் தொடர்ந்து அவருக்கு இருந்துவந்தது.
இந்நிலையில் நீண்டகால காத்திருப்புக்கு விடை கிடைக்கும் வகையில், அஜித் அகர்கர் தலைமையிலான தற்போதைய தேர்வுக்குழு விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் கிடைக்காததால் சர்ஃபராஸ் கானை அணிக்குள் எடுத்துவந்தது. இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சர்ஃபராஸ் கான், தன்னுடைய அபாரமான ஆட்டத்திறன் மூலம் அறிமுக போட்டியிலேயே ஜொலித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி தன்னுடைய தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃபராஸ் கான், ஸ்வீப், லேட் கட், ஸ்டிரைட் ஹிட், ஸ்லாக் ஸ்வீப் என களத்தில் இங்கிலாந்து பவுலர்களை திக்குமுக்காட வைத்தார்.
9 பவுண்டரிகள் 1 சிக்சர் என மிரட்டிய சர்ஃபராஸ் அறிமுக போட்டியிலேயே 48 பந்துகளுக்கு அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே குறைவான பந்துகளில் அரைசதமடித்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் அடித்து அசத்தினார்.
சர்ஃபராஸ் கானின் ஆட்டத்தை புகழ்ந்து பேசிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன் பால் காலிங்வுட், “சர்ஃபராஸ் கான் விளையாடிய விதம் பிரம்மிக்க வைத்தது, அறிமுகப் போட்டியில் அப்படி விளையாடுவதற்கு நிறைய தைரியம் தேவை. பென் ஸ்டோக்ஸ் அவருக்காக பீல்டிங்கை டைட்டாக செட் செய்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார். ஆனால் அவர் தன்னுடைய தாக்குதலை வான்வழியாக எடுத்துச் செல்ல பயப்படவில்லை” என்று சர்ஃபராஸ் கானை புகழ்ந்தார்.
இந்நிலையில் சர்ஃபராஸ் கானை புகழ்ந்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, அவர் 5 நாள் போட்டிகளுக்கு சிறந்த வீரர், ஆனால் டி20 ஃபார்மேட் முற்றிலும் வேறானது என்று தெரிவித்துள்ளார்.
ரெவ் ஸ்போர்ட்ஸ் உடனான நேர்காணலில் பேசிய கங்குலியிடம், ஐபிஎல்லில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏன் சர்ஃபராஸ் கானை தக்கவைக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ”இல்லை, அவர் முற்றிலும் ஐந்து நாள் ஆட்டக்காரர் என்று நான் நினைக்கிறேன். அவரது ஆட்டம் அதற்கு ஏற்றது. ஆனால் டி20 என்பது ஒரு வித்தியாசமான வடிவம்” என்று தெரிவித்தார்.
மேலும், “உள்நாட்டு கிரிக்கெட்டிலும், ரஞ்சி;க கோப்பையிலும், முதல் தர கிரிக்கெட்டிலும் அவர் அடித்த ரன்களின் அளவு அபாரமானது. எல்லோரும் சொல்வது போல், நீங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்கள் எடுத்தால், அது எப்போதும் வீண் போகாது. அதுதான் சர்ஃபராஸ் கானுக்கும் நடந்தது” என்று கங்குலி பதிலளித்தார்.