இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க மகளிர் அணி, 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ஸ்மிரிதி மந்தனாவின் அசத்தலான சதத்தால் முதல் இன்னிங்ஸில் 265 ரன்களை குவித்துள்ளது இந்திய அணி.
2024 மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை தட்டிச்சென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா, மகளிர் ஐபிஎல் தொடருக்கு பிறகு முதல்முறையாக சின்னசாமி ஸ்டேடியத்தில் பேட்டிங் செய்தார். மந்தனாவிற்காக குவிந்த பெங்களூரு ரசிகர்களை ஏமாற்றாத மந்தனா, இந்திய மண்ணில் தன்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை எடுத்துவந்து மிரட்டினார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனாவை தவிர வேறு எந்த பேட்டர்களும் சோபிக்கவில்லை. ஷபாலி, ஹர்மன்ப்ரீத், ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஸ் என அனைத்து நட்சத்திர வீரர்களும் 7, 10, 17, 3 என சொற்ப ரன்களில் வெளியேற, இந்திய அணி 99 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் ஒருபுறம் நிலைத்து நின்று விளையாடிய ஸ்மிரிதி மந்தனா தனியொரு ஆளாக இந்திய அணியை சுமந்து நல்ல டோட்டலுக்கு வழிநடத்தினார்.
10 பவுண்டரிகளை பறக்கவிட்டு 93 ரன்களுடன் களத்திலிருந்த ஸ்மிரிதி, 42வது ஓவரில் க்ளாஸ் வீசிய 2வது பந்தை தூக்கி சிக்சருக்கு விளாசினார். 99 ரன்களுக்கு சென்ற மந்தனா அடுத்த பந்தில் சிங்கிளுக்கு செல்ல தன்னுடைய 6வது சர்வதேச ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.
127 பந்துகளில் 12 பவுண்டரிகள், 1 சிக்சர் என துவம்சம் செய்த ஸ்மிரிதி 117 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, கடைசியாக வந்து 37 மற்றும் 31 ரன்கள் அடித்த தீப்தி ஷர்மா மற்றும் பூஜா இருவரும் இந்திய அணியை 265 ரன்களுக்கு அழைத்துச்சென்றனர்.
*இந்தியாவிற்காக அதிக ODI சதங்கள்: இந்திய அணிக்காக தன்னுடைய 6வது சர்வதேச ஒருநாள் சதத்தை அடித்த ஸ்மிரிதி, அதிக ஒருநாள் சதங்கள் அடித்த இந்தியவீரர்கள் பட்டியலில் ஹர்மன்ப்ரீத்தை பின்னுக்குதள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தார். முதலிடத்தில் 7 சதங்களுடன் இருக்கும் மிதாலி ராஜின் சாதனையை சமன்செய்ய இன்னும் ஒரு சதமே மந்தனாவிற்கு மீதமுள்ளது.
* தொடக்க வீரராக அதிக சதங்கள்: இந்திய அணிக்காக அதிக (6) ஒருநாள் சதங்களை அடித்த ஒரே தொடக்க வீரராக ஸ்மிரிதி மட்டுமே நீடிக்கிறார். மற்ற வீரர்கள் அனைவரும் அதிகபட்சமாக இரண்டு சதங்களை மட்டுமே அடித்துள்ளனர்.
* 7000 சர்வதேச ரன்கள்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சதமடித்ததை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்துள்ளார் ஸ்மிரிதி மந்தனா. இந்த சாதனையை படைக்கும் இரண்டாவது இந்திய வீராங்கனை மற்றும் 6வது உலக வீராங்கனை என்ற சாதனையையும் ஸ்மிரிதி மந்தனா படைத்து அசத்தியுள்ளார்.
* அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர்: 117 ரன்களை பதிவுசெய்த ஸ்மிரிதி மந்தனா, ஒருநாள் போட்டியில் மிதாலி ராஜ் பதிவுசெய்த 109 ரன்களை பின்னுக்கு தள்ளி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த முதல் இந்திய வீராங்கனையாக மாறி அசத்தியுள்ளார்.
266 என்ற இலக்கை நோக்கி விளையாடிவரும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது.