2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் “Timed Out” என்ற விதிமுறையின் கீழ் வெளியேறிய ஏஞ்சலோ மேத்யூஸ், அனைத்து செய்தி பத்திரிக்கைளிலும் தலைப்புச்செய்தியாக மாறினார். அப்படி ஒரு விதிமுறை மூலம் முதல் பேட்டராக அவுட்டாகி வெளியேறிய மேத்யூஸ், தற்போது மீண்டும் ஒரு விநோதமான முறையில் அவுட்டாகி பேசுபொருளாகி உள்ளார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில், முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை விக்கெட் கீப்பர் சதீரா ஆப்கானிஸ்தான் ஸ்டார் பேட்டரான ரஹ்மத் ஷாவின் விக்கெட்டை, ஒரு அசாத்தியமான முயற்சியால் வீழ்த்திய பிறகு ஆப்கானிஸ்தான் ஆல்அவுட்டானது.
தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் இலங்கை அணி, ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தினேஷ் சண்டிமால் இருவரின் அபாரமான சதத்தால் 400 ரன்களை கடந்து நல்ல நிலையில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தான் சதமடித்து விளையாடிக்கொண்டிருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட்டான விதம் பேசுபொருளாக மாறியுள்ளது.
141 ரன்களுடன் களத்திலிருந்த மேத்யூஸ் கைஸ் அகமது வீசிய 102வது ஓவரின் இரண்டாவது பந்தில் பவுண்டரி அடிக்க முயன்று தன்னுடைய விக்கெட்டையும் பறிகொடுத்தார். நீண்டநேரம் நிலைத்து நின்றதால் பந்து ஃபுட்பாலாக தெரிய, கைஸ் அகமது பந்தை லெக் சைடில் ஓய்டு பந்தாக வீசினார். ஆனால் அதையும் சேஸிங் செய்த மேத்யூஸ் பவுண்டரி அடிக்கும் முயற்சியில் வேகமாக நகர்ந்து அடிக்க, பந்துபவுண்டரிக்கும் பறந்தது. ஆனால் அவருடைய பேட் ஸ்டம்பில் வேகமாக அடிக்க ஹிட் அவுட்டாகி வெளியேறினார்.
டைம் அவுட்டுக்கு பிறகு மேத்யூஸ் இப்படி வெளியேறியதை ரசிகர்கள் கலாட்டாவாக பகிர்ந்து வருகின்றனர்.