கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கப்பட்ட 2023 ஆசியக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இரண்டு சிறந்த ஆசிய அணிகளில் எந்த அணி கோப்பையை தூக்கப்போகிறது என முடிவு செய்யும் பைனல் போட்டியானது, கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடந்து வருகிறது.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா இந்திய அணியை பந்துவீசுமாறு அழைத்தார். மழையின் இடையூறு காரணமாக சற்று தாமதமாக தொடங்கப்பட்ட போட்டியில் இலங்கை வீரர்கள் பதும் நிஷாங்கா மற்றும் குசால் பெரேரா இருவரும் பேட்டிங்கை தொடங்கினர். இலங்கைக்கு டஃப் கொடுக்கும் முயற்சியில் களமிறங்கி, நல்ல தொடக்கத்தை கொடுத்தார் ஜஸ்பிரித் பும்ரா. பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே அவுட் ஸ்விங் டெலிவரியில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார் குசால் பெரேரா.
1 ரன்னுக்கு 1 விக்கெட்டை இழந்து தடுமாறிய இலங்கை அணியை எழவே விடாமல் தலைகீழாக திருப்பி போட்டார் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ். போட்டியின் 4வது ஓவரை சிராஜ் வீச, ஓவரின் முதல் பந்தை கவர் திசையில் காற்றில் அடித்தார் ஓப்பனர் நிஷாங்கா. அதை ஜடேஜா கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த சமரவிக்ரமாவை நிக்கவே விடாமல் LBW-ல் வெளியேற்றி அசத்தினார். அதற்கு பிறகு வந்த அசலங்கா மற்றும் தனன்ஜெயா இருவருக்கும் என்ன நடந்தது என்றே தெரியாமல் தொடர்ச்சியாக வெளியேறினர். ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது சிராஜ் இந்திய அணிக்கு ஒரு அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
அத்துடன் நிறுத்தாத சிராஜ் அடுத்த ஒவரில் இலங்கை கேப்டன் தசுன் ஷனகாவை போல்ட்டாக்கி வெளியேற்ற 12 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி. மென் இன் ஃபார்மில் இருந்த அனைத்து வீரர்களும் மோசமாக வெளியேறிய நிலையில் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய விக்கெட் கீப்பர் குசால் மெண்டிஸ் மற்றும் வெல்லேலகே இருவரும் விளையாடி வருகின்றனர். 11.2 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 33 ரன்களுடன் விளையாடி வருகிறது.