கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கப்பட்ட 2023 ஆசியக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இரண்டு சிறந்த ஆசிய அணிகளில் எந்த அணி கோப்பையை தூக்கப்போகிறது என முடிவு செய்யும் பைனல் போட்டியானது, கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடந்து வருகிறது.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா இந்திய அணியை பந்துவீசுமாறு அழைத்தார். நல்ல தொடக்கத்தை கொடுத்து இந்தியாவிற்கு டஃப் கொடுக்கும் முயற்சியில் களமிங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் ஜஸ்பிரித் பும்ரா. பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே அவுட் ஸ்விங் டெலிவரியில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார் குசால் பெரேரா.
1 ரன்னுக்கு 1 விக்கெட்டை இழந்து தடுமாறிய இலங்கை அணியை எழவே விடாமல் தலைகீழாக திருப்பி போட்டார் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ். போட்டியின் 4வது ஓவரை வீச வந்த சிராஜ் இலங்கையின் நிஷாங்கா, சமரவிக்ரமா, அசலங்கா மற்றும் தனன்ஜெயா என 4 வீரர்களையும் அடுத்தடுத்து வெளியேற்றி அசத்தினார். ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய சிராஜ் அத்துடன் நிறுத்தாமல் அடுத்த ஒவரில் இலங்கை கேப்டன் தசுன் ஷனகாவை போல்ட்டாக்கி வெளியேற்ற 12 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி.
பின்னர் களத்திற்கு வந்த மென் இன் ஃபார்ம் வீரர் குசால் மெண்டீஸ் ரன்கள் சேர்க்க, மீண்டும் பந்துவீச வந்த சிராஜ் மெண்டீஸை போல்ட்டாக்கி வெளியேற்றினார். சிராஜின் அற்புதமான பவுலிங்கால் இலங்கை அணி 15.2 ஓவரில் 50 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. 7 ஓவரில் 21 ரன்கள் கொடுத்த மொஹமது சிராஜ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்த போட்டியில் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ், 20 வருடங்களுக்கு முன் சமிந்தா வாஸ் படைத்த உலக சாதனையை சமன் செய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே உலக சாதனையாக இருந்தது.
இதை 2003-ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இலங்கையின் நட்சத்திர பந்துவீச்சாளர் சமிந்தா வாஸ் படைத்திருந்தார். அந்த சாதனையை இந்திய வீரர் முகமது சிராஜ் இலங்கை அணிக்கு எதிராகவே படைத்து இன்று அசத்தியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக முதல் 10 ஓவரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற ரெக்கார்டையும் சிராஜ் படைத்துள்ளார். இந்த பட்டியலில் 5 விக்கெட்டுகளுடன் சிராஜ் முதலிடத்திலும், 4 விக்கெட்டுகளுடன் ஜவஹல் ஸ்ரீநாத், புவனேஷ்குமார், ஜஸ்பிரித் பும்ரா முதலிய வீரர்கள் அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றனர்.
12 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, எந்தவொரு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியிலும் அதிக முறை குறைவான ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. ஏற்கனவே 2009ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் 6 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை விட்டிருந்த இலங்கை அணி, தற்போது ஆசியகோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு எதிராக 12 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிகளில் இலங்கை 2 முறை குறைவான ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான சாதனையை படைத்துள்ளது. இந்த வரிசையில் 21 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளுடன் தென்னாப்பிரிக்க அணியும், 28 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளுடன் பாகிஸ்தான் அணியும் இருக்கின்றன.