மத்தியபிரதேசத்தில் இந்தூரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டி செய்ய வந்த இந்திய அணிக்கு முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
இதனையடுத்து சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். தொடக்க முதலே இருவரும் பவுண்டரிகளாக விளாசி தள்ளினர். கிட்டத்தட்ட இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ரன்களை குவித்தனர்.
இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் முதல் 10 ஓவர்களில் 79 ரன்கள் எடுத்த இந்திய அணி அடுத்த 10 ஓவர்களிலும் 79 எடுக்க 20 ஓவர்களில் இந்திய அணி 150 ரன்களை கடந்தது. இந்த ஜோடி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்திய அணி 28.3 ஓவர்களில் 200 ரன்களை எட்டிய நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் 86 பந்துகளில் சதம் விளாசினார். இருப்பினும் 90 பந்துகளில் 105 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.
அவரைத் தொடரும் சுப்மன் கில்லும் 92 பந்துகளில் சதம் விளாசினார். இவரும் சதம் விளாசிய கையோடு நடையைக் கட்டினார். சுப்மன் கில் 97 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
40.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் கே.எல்.ராகுலும் வந்த வேகத்தில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இஷான் கிஷனும் முதல் பந்திலே சிக்ஸர் விளாசினார். அதனால், இந்திய அணி 350 ரன்களை எளிதில் கடப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து இஷான் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 36 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
சர்வதேச அரங்கில் சுப்மன் கில்லுக்கு இது ஆறாவது சதம் ஆகும். 2023 ஆம் ஆண்டில் மட்டும் அவர் பதிவு செய்துள்ள 5 ஆவது சதம் இது. இன்னும் 30 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடம்பிடிப்பார்.