2024 ஐபிஎல் தொடரில் தன்னுடைய அதிரடியான ஹிட்டிங் திறமையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஷிவம் துபே, ஸ்பின்னர்களின் மீதான தாக்குதலுக்காக உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெற்ற 2024 டி20 உலகக்கோப்பை முழுவதும் தன்னுடைய ஃபார்மை எடுத்துவர முடியாமல் தடுமாறிய ஷிவம் துபே, லீக் போட்டிகள் மொத்தமும் சொற்ப ரன்களில் வெளியேறி சொதப்பினார்.
பெஞ்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் முதலிய மாற்றுவீரர்கள் இருந்த போதும், சரியாக செயல்படாத ஷிவம்துபே மீது நம்பிக்கை வைத்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் இறுதிப்போட்டிவரை வாய்ப்பளித்தனர்.
தன் கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் நம்பிக்கையை காப்பாற்ற இறுதிப்போட்டிவரை காத்திருந்த ஷிவம் துபே, இறுதிப்போட்டியில் 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தது இந்தியாவின் பட்டத்தை வென்றதில் முக்கியமானதாக அமைந்தது.
ஃபார்ம் அவுட்டில் தடுமாறிய போதும் தொடர்ந்து ஆதரவளித்த ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவருக்கும் நன்றி தெரிவித்த ஷிவம் துபே, “உலகக் கோப்பைப் பயணம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. இறுதிப்போட்டி ஒரு முக்கியமான தருணம், சரியான நேரத்தில் அணிக்காக என்னால் பங்களிக்க முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
டி20 உலகக் கோப்பையில் ஒவ்வொரு போட்டியும் ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளரின் அசைக்க முடியாத ஆதரவு கிடைத்தது நம்பமுடியாததாக இருந்தது.
அவர்கள் தொடர்ந்து என்னை ஆதரித்து, நேர்மறையாக இருக்கவும் கடினமாக உழைக்கவும் ஊக்குவித்தார்கள். எனது திறமை மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அவர்களின் வழிகாட்டுதல், தொடர்ந்து என்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்துவதற்கும், என்னை நம்புவதற்கும் உதவியது. அவர்கள் கொடுத்த இந்த அனுபவம் என்னை மேலும் வலுவாகவும், எதிர்காலத்தில் அணியின் வெற்றிக்கு பங்களிக்கவும் உதவும் என்று நம்புகிறேன்” என IANS உடன் பேசியுள்ளார்.