ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய பயிற்சியாட்டம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரண்டு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆர்டர்கள் தொடங்கி மிடில் ஆர்டர் வரை அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். 5 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் விளாசிய க்ளென் மேக்ஸ்வெல் தன்னுடைய ஃபார்மை மீட்டெடுத்துவந்தார். முடிவில் 351 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியில் இஃப்திகார் அகமது மற்றும் பாபர் அஷாம் இருவரும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இஃப்திகர் 83 ரன்கள் எடுக்க, பாபர் அசாம் 90 அடித்திருந்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட்டில் வெளியேறினார். கடைசிவரை சென்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பாகிஸ்தான் அணிக்கும் மிஸ்-பீல்டிங்கிற்கும் இருக்கும் வரலாறு என்பது காலம் காலமாக தொடர்ந்து வருவது. பாகிஸ்தான் அணியில் திறமையான வீரர்கள் இருந்தாலும் முக்கியமான போட்டிகளில் ஃபீல்டிங்கில் கோட்டைவிடும் அந்த அணி பல சிறந்த வாய்ப்புகளை எல்லாம் தவறவிட்டுள்ளது. அப்படித்தான் நடந்து முடிந்த ஆசியக்கோப்பை தொடரிலும் இலங்கை அணிக்கு எதிராக மிஸ்-பீல்டிங்கில் கோட்டைவிட்டு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது பாகிஸ்தான் அணி. இந்நிலையில் இன்றைய போட்டியிலும் அதேபோலான மிஸ்-பீல்டிங்கில் பாகிஸ்தான் வீரர்கள் ஈடுபட்டனர்.
இன்றைய போட்டியின் 23வது ஓவரில் ஹரிஸ் ராஃபுக்கு எதிராக மார்னஸ் லாபுசாக்னே பந்தை ஸ்கொயர் லெக்கிற்கு அடித்தபோது, அங்கு முகமது வாசிம் மற்றும் முகமது நவாஸ் இருவரும் பந்தை நிறுத்த ஓடிவந்தனர். ஃபீல்டர்களுக்குள் பேச்சு இல்லாததால் இருவரும் பந்தை பிடிக்க சென்று மோதுவது போல் சென்றனர். அப்போது இருவரும் மோதிவிடாமல் இருக்க நின்றுவிட பந்து மட்டும் கடந்து சென்றது. பின்னர் இருவரும் பந்தைபிடிக்க ஓட முயன்று, அவர் ஓடுவார் என வாசிமும், இவர் ஓடுவார் என நவாஸும் நிற்க மெதுவாக சென்ற பந்து பவுண்டரி லைனுக்கே சென்றுவிட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களின் இந்த மோசமான பீல்டிங்க் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் ஷிகர் தவன், “பாகிஸ்தானுக்கும் பீல்டிங்கிற்கும் இருக்கும் காதல் முடிவே இல்லாதது” என குறிப்பிட்டுள்ளார்.