போட்டி 2: பாகிஸ்தான் vs நெதர்லாந்து
போட்டி முடிவு: 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
ஆட்ட நாயகன்: சௌத் ஷகீல் (பாகிஸ்தான்)
பேட்டிங்: 52 பந்துகளில் 68 ரன்கள். 9 ஃபோர்கள், 1 சிக்ஸர்
"மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய அடிப்படையை சரியாகக் கையாண்டு பாசிடிவான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு உதவவேண்டும் என்று நினைத்தேன். நாங்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்ததால், கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் அந்த பௌண்டரிகள் கிடைத்தது என் அதிர்ஷ்டம். ரன் அடித்தால் நெருக்கடி போய்விடும் என்று பேசியிருந்தோம். அதுவே நடந்தது. கடந்த 2-3 மாதங்களாகவே கடுமையாக உழைத்துவருகிறார். ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வேன் என்பதால் என்னுடைய ஷாட்களை நான் மெருகேற்றிக்கொண்டிருக்கிறேன். அட்டாகிங் ஷாட்கள் ஆட பயிற்சி செய்திருக்கிறேன். பயிற்சியாளர்கள் எனக்கு பெரும் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள்"
சௌத் ஷகீல்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தாலும், நெதர்லாந்து ஆல் ரவுண்டர் பாஸ் டி லீட் பேட்டிங், பௌலிங் இரண்டு துறைகளிலுமே மிகச் சிறப்பாக செயல்பட்டார். முதலில் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் (9 - 0 - 62 - 4) வீழ்த்திய அவர், பேட்டிங்கிலும் அசத்தினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்தாலும், நிலைத்து நின்று ஆடி 68 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார் அவர். இப்படியொரு உலகக் கோப்பை போட்டியில் அரைசதம் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்த வீரருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்படவில்லை. காரணம், ஆட்டத்தின் போக்கில் ஷகீலின் இன்னிங்ஸ் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியில் அவரது இன்னிங்ஸ் தான் பாகிஸ்தானை மீண்டும் ஆட்டத்துக்குக் கொண்டுவந்தது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் மிகவும் மோசமாக அமைந்தது. 9.1 ஓவரில் 38 ரன்களே எடுத்திருந்த போது மூன்றாவது விக்கெட்டை இழந்தது அந்த அணி. ஃபகர் ஜமான், பாபர் ஆசமுக்கு அடுத்தபடியாக ஓப்பனர் இமாம் உல் ஹக்கும் வெளியேறியிருந்தார். உலகக் கோப்பை அனுபவம் கொண்ட 3 சீனியர் வீரர்கள் வெளியேறிய நிலையில் களம் புகுந்தார் தன் முதல் உலகக் கோப்பை போட்டியில் ஆடும் சௌத் ஷகீல்.
10 ஓவர்களுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நெதர்லாந்து பௌலர்கள் அதீத நம்பிக்கையோடு செயல்பட்டனர். ஷகீலும் தன் இன்னிங்ஸை ஒருவித பதற்றத்தோடுதான் தொடங்கினார். அவர் சந்தித்த இரண்டாவது பந்தே அவரை சொதித்தது. அந்த ஷார்ட் பாலை அவர் தவறாக ஆட, பந்து எட்ஜ் ஆனது. இருந்தாலும், ஸ்லிப்புக்கும் கல்லிக்கும் இடையிலான இடைவெளியில் சென்று பௌண்டரி ஆனது. 11வது ஓவரிலும் இன்னொருமுறை தப்பினார் ஷகீல். ஆர்யன் தத் பந்துவீச்சில் மீண்டும் அவர் எட்ஜாக, முதல் ஸ்லிப்பால் அந்த கடினமான கேட்சைப் பிடிக்க முடியாமல் போனது. அந்த பந்தும் எப்படியோ அவருக்கு 4 ரன்களைப் பெற்றுக்கொடுத்தது. எப்படியோ தட்டுத் தடுமாறி 10 ரன்களைக் கடந்துவிட்ட அவர், அதன்பிறகு தன் இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அனுபவ நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வானோடு இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப்பும் அமைத்தார் அவர்.
13வது ஓவருக்குப் பிறகு ஷகீல் ஆடிய ஆட்டம் அட்டகாசமாக இருந்தது. வேன் மீக்ரன், டி லீட் ஆகியோரின் பந்துகளில் ஃபோர்கள் அடித்தவர், அதன்பிறகு அற்புதமாக ஸ்டிரைக்கை ரொடேட் செய்தார். கடினமான மிடில் ஓவர்களில் அதிகம் டாட் பால்களே ஆடாமல் சிங்கிள்கள் எடுத்துக்கொண்டே இருந்தார். அவர் நல்ல டச்சில் இருந்தது ரிஸ்வான் மீதிருந்த நெருக்கடியையும் குறைத்தது. அதனால் அவராலும் சில ரிஸ்க்கான ஷாட்களை கணித்து ஆட முடிந்தது.
வேகம், ஸ்பின் என அனைத்தையும் அடித்து ஆடிய ஷகீல், அனுபவ ஸ்பின்னர் வென் டெர் மெர்வின் ஓவரில் அடுத்தடுத்து ஃபோரும், சிக்ஸரும் அடித்து மிரட்டினார். இரண்டு ஓவர்கள் கழித்து விக்ரம்ஜித் வீசிய ஓவரில் அடுத்தடுத்து 2 பௌண்டரிகள் அடித்தார் அவர். மிட் ஆஃப் சர்க்கிளுக்குள் இருப்பதை நன்கு உணர்ந்து அந்த இரண்டு ஷாட்களையும் தூக்கி அடித்து ஃபோர் ஆக்கினார். நெதர்லாந்து அணியின் ஃபீல்ட் செட் அப்பை நன்றாகப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப ஷாட்களை ஆடி அசத்தினார் அவர். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் சிங்கிள் எடுத்து தன் முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே அரைசதம் கடந்தார் அவர். அதற்கு அவர் எடுத்துக்கொண்டது வெறும் 32 பந்துகள் தான். முதல் போட்டியில் கான்வே, ரவீந்திரா ஆகியோர் செய்ததைப் போல் அந்த அரைசதத்தை சதமாக மாற்றுவார் என்று எதிர்பார்த்திருந்தபோது, 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் அவர். ஆர்யன் தத் பந்தை தூக்கி அடிக்க முற்பட்டு கேட்ச் ஆனார் அவர்.
அவர் வெளியேறியபோது பாகிஸ்தான் அணி 28.1 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்திருந்தது. ரிஸ்வானுடன் இணைந்து 120 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஷகீல். முக்கியமாக ரன்ரேட்டை ஐந்துக்கும் மேல் வைத்திருந்தது அந்தக் கூட்டணி. இல்லையெனில் நிச்சயம் நெதர்லாந்து அணி மிடில் ஓவர்களில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும். அதற்கு வழிவிடாமல் போட்டியை பாகிஸ்தானுக்கு சாதகமாக எடுத்து வந்ததால் ஆட்ட நாயகன் விருதை வென்றார் ஷகீல்.