இந்தியா நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 402 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 134 ரன்களையும், கான்வே 91 ரன்களையும் குவித்திருந்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 356 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி 356 ரன்களுக்கு மேல் எடுத்து முன்னிலை பெறுவது இதுவே முதன்முறை.
இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் 35 ரன்களையும், ரோகித் சர்மா 52 ரன்களையும் எடுத்தனர். விராட் கோலியும் சர்ஃபராஸ் கானுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்தார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், அன்றைய கடைசி பந்தில் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
நான்காம் நாளான இன்று ரிஷப் பந்தும் சர்ஃபராஸ் கானும் ஜோடி சேர்ந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃபராஸ் கான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தினை பதிவு செய்தார். ரிஷப் பந்தும் சிறப்பாக ஆடி தனது 18 ஆவது அரைசதத்தினை பூர்த்தி செய்தார்.
இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 344 ரன்களை எடுத்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. தற்போது இந்திய அணி 12 ரன்கள் பின் தங்கியுள்ளது.