இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த ஜனவரி 25ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஒல்லி போப் மற்றும் டாம் ஹார்ட்லி இருவரின் அபாரமான ஆட்டத்தால், இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் மட்டும் 2வது டெஸ்ட்டில் இடம்பெற மாட்டார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜடேஜாவுடன் சேர்ந்து, காயத்தால் பாதிக்கப்பட்ட கேஎல் ராகுலும் 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவர்களுக்கு பதிலாக 3 வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கவிருக்கும் 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், சர்ஃபராஸ் கான், சவுரப் குமார், வாஷிங்டன் சுந்தர் முதலிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜடேஜா இல்லாத நிலையில் அவருக்கு மாற்றுவீரராக வாஷிங்டன் சுந்தர் மற்றும் சவுரப் குமார் இரண்டு இடது கை ஸ்பின்னர்களையும், கே.எல் ராகுலுக்கு பதிலாக சர்ஃபராஸ் கானையும் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது.
சர்ஃபராஸ் கான்: ஒவ்வொரு முறை இந்தியாவின் டெஸ்ட் அணி அறிவிக்கப்படும்போதும், சர்ஃபராஸ் கானின் பெயர் அடிபடும். கடந்த 3 வருடங்களாக முதல்தர கிரிக்கெட்டில் ரன்களை வாரிகுவித்துவரும் சர்ஃபராஸ் கானுக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகும். முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கூட சர்ஃபராஸ் கானுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் நீண்டகால காத்திருப்பிற்கு விடை கிடைக்கும் வகையில் சர்ஃபராஸ் கானை இந்திய அணியில் தேர்வுசெய்துள்ளது தேர்வுக்குழு. முதல்தர கிரிக்கெட்டில் 69 சராசரி வைத்திருக்கும் சர்ஃபராஸ் கான், ஒரு முச்சதத்துடன் 14 சதங்கள் மற்றும் 11 அரைசதங்களுடன் 3912 ரன்கள் குவித்துள்ளார்.
சவுரப் குமார்: இடது கை ஆர்தடாக்ஸ் ஸ்பின்னர் மற்றும் ஆல்ரவுண்டரான சவுரப் குமார், தன்னுடைய முதல் டெஸ்ட் அறிமுகத்தை எதிர்நோக்கும் வகையில் இந்திய அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.
முதல்தர கிரிக்கெட்டில் 68 போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர், 22 முறை 5 விக்கெட்டுகளையும், 8 முறை 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மொத்தமாக 290 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் இவருக்கு முதல் டெஸ்ட் போட்டிக்கான அறிமுகம் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
வாஷிங்டன் சுந்தர்: இந்திய அணியிலிருந்து காயத்தால் விலகியிருந்த வாஷிங்டன் சுந்தர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். ஜடேஜாவிற்கு மாற்றுவீரராக பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் இரண்டிலும் பார்க்கப்படும் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பொறுத்து தான் பார்க்கவேண்டும்.