‘கிரிக்கெட் எல்லோருக்குமான போட்டி!’ - இன்று களமிறங்கும் சர்ஃபராஸ் கான்... கண்ணீரில் நனைந்த ராஜ்கோட்!

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சர்ஃபராஸ் கான் முதன்முறையாக களமிறங்குகிறார்.
தந்தையுடன் சர்ஃபராஸ் கான்
தந்தையுடன் சர்ஃபராஸ் கான்புதிய தலைமுறை
Published on

டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அல்லது போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் போதெல்லாம் அடிபடும் பெயர் சர்ஃபராஸ் கான். ஏன் எடுக்கவில்லை, எல்லாம் அரசியல் என்பன போன்ற பதங்கள் சர்ஃபராஸ் கானுக்கு ஆதரவாக இணையத்தில் சகஜமாக பயன்படுத்தப்பட்டிருக்கும். ஏனெனில் முதல் தர கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் அப்படிப்பட்டது. முதல்தர கிரிக்கெட்டில் 69 சராசரி வைத்திருக்கும் சர்ஃபராஸ் கான், ஒரு முச்சதத்துடன் 14 சதங்கள் மற்றும் 11 அரைசதங்களுடன் 3912 ரன்கள் குவித்துள்ளார்.

பல முன்னணி வீரர்கள் பலரும் சர்ஃபராஸ் கானுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். சுனில் கவாஸ்கர், “உங்களுக்கு பார்ப்பதற்கு ஸ்லிம்மாக இருப்பவர்தான் வேண்டுமென்றால் ஃபேஷன் ஷோவிற்கு செல்லுங்கள்” என்று பிசிசிஐ தேர்வுக்குழுவை கடுமையாக சாடியிருந்தார். தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ், “ஒரு வீரர் கடந்த 3 வருடங்களாக 69 சராசரியுடன் ரன்களை குவித்துவருகிறார் என்றால், அது சாதாரண விசயம் கிடையாது. யாருக்காவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்றால், அது முதலில் சர்ஃபராஸ் கானுக்குதான் வழங்கப்படவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

தந்தையுடன் சர்ஃபராஸ் கான்
”சர்ஃபராஸ் கான் யாரையும் அவமதிக்கல”- அன்று நடந்தது என்ன? மும்பை கிரிக்கெட் வட்டாரம் சொல்வது இதுதான்!

இந்நிலையில் ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகு இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னணி வீரர்கள் விராட், ராகுல் இல்லாத சூழலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் தான் அணியில் சேர்க்கப்பட்டது குறித்து பேசிய சர்பராஸ் கான், “என் தந்தைதான் என்னை கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தினார். முதலில் நான் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாகவே இருந்தேன், அப்போதெல்லாம் விரைவாகவே அவுட்டாகி வெளியேறிவிடுவேன். என்னால் பெரிய ஸ்கோரை அடிக்கமுடியாது. அப்போது மற்றவீரர்கள் நீண்டநேரம் ஆடுவதை பார்த்து நம்மால் அது முடியவில்லையே என வருத்தப்பட்டுள்ளேன். ஆனால் என் தந்தை கடின உழைப்பின் மீது எப்போதும் நம்பிக்கையோடு இரு எனக்கூறுவார். தற்போது நான் அடைந்துள்ள இடத்திற்கான முழுபலனும் அவருடைய கடின உழைப்பின் விளைவாகும்” என தெரிவித்திருந்தார்.

பிசிசிஐ உடனான உரையாடலில் பேசியிருக்கும் அவர், “என்னை விட, என் தந்தைக்காக நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் இந்த நாளைப் பார்க்க வேண்டும் என்று கனவு கண்டார். 125 கோடி பேரில் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறேன்" என்று கண்கள் கலங்கியபடி பேசியிருந்தார் சர்ஃபராஸ் கான்.

இங்கிலாந்து உடனான மூன்றாவது போட்டியில் அவரது கனவு நனவாகியுள்ளது. இந்திய அணிக்காக இன்று நடக்கும் களமிறங்க இருக்கிறார் சர்ஃபராஸ் கான். அவருடன் துருவ் ஜூரலும் இந்திய அணிக்காக இன்று களமிறங்க இருக்கிறார்.

சர்ஃபராஸ் கான் விளையாடுவதை உறுதி செய்து அவருக்கு தொப்பி வழங்கப்பட்டபோது அவரது தந்தை மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்திய நிகழ்வு, நீண்ட நாள் காத்திருப்புக்கு கிடைத்த பலன்.! அவரது தந்தையின் சட்டையில்,

‘Cricket is a Gentleman's EVERYONE'S game’

என்று எழுதப்பட்டிருந்த வாசகமும் எல்லோர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com