இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு மேற்கிந்திய தீவுகளுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5டி போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதனிடையே மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான வீரர்கள் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. இதில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிவரும் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது.
இதுபற்றி பேசிய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ”அவர் தொடர்ந்து 3 ரஞ்சி கோப்பை சீசன்களில் 100 ரன்களுக்கு மேல் சராசரியோடு விளையாடிக் கொண்டிருக்கிறார். இன்னும் அவரிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? அவரை பிளேயிங் லெவனில் எடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. 15 பேர் கொண்ட அணியிலாவது சேர்த்து அவரின் திறமையை அங்கீகரித்ததாக அவரிடம் உணர்த்த வேண்டும்” என ஆவேசமாக பேசியிருந்தார்.
இதேபோல சர்ஃபராஸ் கானை அணியில் எடுக்காததற்கான காரணம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் பேசியிருந்தார். அவர் கூறுகையில், “உங்களுக்கும் (பிசிசிஐ) எனக்கும் தெரியாத வேறு ஏதாவது காரணம் இருந்தால், அதை வெளிப்படையாக சொல்லுங்கள். சர்ஃபராஸ் கானை பற்றிய குறிப்பிட்ட விஷயம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதையாவது வெளிப்படையாக கூறுங்கள். ஆனால் அப்படி ஏதாவது காரணம் இருக்கிறதா என்பது நமக்கு தெரியவில்லை” என்றிருந்தார்.
இந்நிலையில், சர்ஃபராஸ் கானை ஏன் சேர்க்கவில்லை என்பது குறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில் “சர்ஃபராஸ் கான் அணியில் எடுக்கப்படாமல் இருக்க அவரின் உடற்தகுதி மட்டும் காரணம் இல்லை. அவர் களத்துக்கு உள்ளேயும் வெளியே நடந்து கொள்ளும் முறை சரியாக இல்லை. ஆக்ரோஷமாக செயல்பட்டு வரும் அவரை நாங்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறோம். அவருக்கு கட்டுப்பாடு தேவை. சர்ஃபராஸ் கான் தனது தந்தையும் பயிற்சியாளருமான நௌஷாத் கானுடன் இணைந்து அந்த அம்சங்களில் பணியாற்றுவார் என்று நம்புகிறோம்” என்றார்.
ஐபிஎல் தொடரில் செயல்பட்ட விதம் மற்றும் ஷார்ட் பந்திற்கு எதிரான பலவீனம் ஆகியவையே சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாததற்கு காரணமா என்ற கேள்விக்கு பதிலளித்த பிசிசிஐ அதிகாரி, 'இது ஊடகங்களால் உருவாக்கப்பட்ட கருத்து' என்று கூறினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “மயங்க் அகர்வால் இந்திய டெஸ்ட் அணியில் நுழைந்த ஒரே மாதத்தில் 1,000 ரன்கள் எடுத்தார். மயங்க் அகர்வால், அவரைப் போல் உள்ளூர் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஹனுமா விஹாரி ஆகியோரின் ஐபிஎல் செயல்பாடுகளை எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு சரிபார்த்துக் கொண்டிருந்ததா? நிலைமை இவ்வாறு இருக்கையில் எஸ்.எஸ்.தாஸின் தேர்வுக் குழுவை மட்டும் ஏன் குற்றஞ்சாட்டுகிறீர்கள்?
தற்போது சர்ஃபராஸ் அணியில் இடம்பிடிப்பது கடினம். சற்று யோசித்துப் பாருங்கள். சர்ஃபராஸ் ஏன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியில் ரிசர்வ் வீரராக கூட இல்லை? அந்த தொடரில் ருதுராஜ் தனது திருமணம் காரணமாக பங்கேற்காத நிலையில் சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் ரிசர்வ் வீரர்களாக இருந்தனர்'' என்று தெரிவித்தார்.
இதில் ‘போட்டியின் போது சர்ஃபராஸ் ஆக்ரோஷமாக கொண்டாடுகிறார்’ என பிசிசிஐ அதிகாரி கூறியிருப்பதால், ‘சர்ஃபராஸ் கான் திறமை இருந்தும் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகிறாரா?’ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியின்போது சதம் விளாசிய சர்ஃபராஸ் கான், அப்போதைய தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மாவை நோக்கி கைகளை நீட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக விமர்சனத்துக்குள்ளானார். இதனால்தான் சர்ஃபராஸ் கான் மீது பிசிசிஐ மனக்கசப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இவை எல்லாமே அனுமானங்கள் தான். சம்பந்தப்பட்ட அந்த வீடியோவை, இங்கே காணலாம்: