பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.
முதலில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் இரட்டை சதமும், ஹாரி ப்ரூக் முச்சதமும் அடித்து அசத்த 823 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி பாகிஸ்தானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.
அதனைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணி அறிமுக வீரர் கம்ரான் குலாமின் அதிரடியான சதத்தால் 366 ரன்கள் சேர்த்தது.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னரான சஜித் கானின் அபாரமான பந்துவீச்சால் பெரிய டோட்டலை குவிக்க முடியாமல் 291 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
முல்தான் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமான சுழற்பந்துவீச்சை வெளிப்படுத்திய சஜித் கான், 26.2 ஓவர்கள் வீசி 111 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இது முல்தான் மைதானத்தில் பதிவுசெய்யப்பட்ட சிறந்த பந்துவீச்சாக மாறியது.
அதுமட்டுமில்லாமல் ஒரே இன்னிங்ஸில் போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், மேத்யூ போட்ஸ் முதலிய 4 வீரர்களின் ஸ்டம்புகளை தகர்த்தெரிந்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்படி ஒரு இன்னிங்ஸில் 4 அல்லது 5 முறை வீரர்களை டக் அவுட்டில் வெளியேற்றிய 4வது பாகிஸ்தான் ஸ்பின்னர் என்ற பெருமையை சஜித் கான் பெற்றுள்ளார்.
ஜோ ரூட்டின் விக்கெட்டை கைப்பற்றிய பிறகு அதை தன்னுடைய கனவு விக்கெட் என்று தெரிவித்த சஜித் கான், ஜோ ரூட்டுடன் பேசியதை பகிர்ந்துகொண்டார்.
ஜோ ரூட் விக்கெட் குறித்து பேசிய சஜித் கான், “ஜோ ரூட் பேட்டிங் செய்ய வருவதற்கு முன் அவரிடம் பேசினேன். நான் இங்கிலாந்தில் உங்கள் சகோதரருக்கு எதிராக விளையாடியுள்ளேன். ஆனால் நீங்கள் தான் என் கனவு விக்கெட் என்று அவரிடம் சொன்னேன், அதைக்கேட்ட அவர் சிரிக்க ஆரம்பித்தார். ஆனால் உண்மையில் அதுவே எனது கனவு மற்றும் இன்று என் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மதிப்புமிக்க விக்கெட்டை கைப்பற்றியுள்ளளேன்" எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணி 75 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.