இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொலம்போவில் இன்று தொடங்கப்பட்டது.
டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுக்க ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இலங்கை அணி நல்ல ஃபார்மில் இருக்கும் இப்ராஹின் ஜத்ரானை முதல் ஓவரிலேயே வெளியேற்றி அசத்தியது. அதற்கு பின் கைக்கோர்த்த நூர் அலி மற்றும் ரஹ்மத் ஷா இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 50 ரன்கள் கடந்த இந்த பார்ட்னர்ஷிப்பை நூர் அலியை வெளியேற்றி பிரித்துவைத்தார் ஃபெர்னாண்டோ.
பின்னர் வந்த வீரர்களை எல்லாம் விரைவாகவே வெளியேற்றிய இலங்கை பவுலர்கள், ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டுவந்தனர். என்னதான் ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மத் ஷா சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போதுதான் அந்த அசாத்தியமான நிகழ்வு அரங்கேறியது.
91 ரன்களுடன் ஆப்கானிஸ்தான் அணிக்காக போராடிக்கொண்டிருந்த ரஹ்மத் ஷா, பிரபாத் ஜெயசூர்யா ஆஃப் சைடில் வீசிய பந்தை முட்டிப்போட்டு லெக் சைடில் அடிக்க முயன்றார். அப்போது பேட்ஸ்மேன் நகர்வதை பார்த்த விக்கெட் கீப்பர் சதீரா சமரவிக்ரமா, பந்து அடிக்க முயன்ற திசைக்கு முன்கூட்டியே நகர்ந்து சென்றார். எப்படியும் பந்தை தடுக்கத்தான் போகிறார் என்று எல்லோரும் நினைக்க, ரஹ்மத் ஷா அடித்த பந்தானது விக்கெட் கீப்பர் கைகளில் சென்று உட்கார்ந்தது. அதை ரஹ்மத் ஷாவால் மட்டுமல்லாமல் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களால் கூட நம்பமுடியவில்லை. தற்போது அந்த கேட்ச் வீடியோ வைரலாகி வருகிறது.
ரஹ்மத் ஷா அவுட்டாகி சென்ற பிறகு சீட்டுக்கட்டுகள் போல் விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் நாள் முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது.