இந்தியாவில் நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இன்று, (நவ.15) முதலாவது அரையிறுதிப் போட்டியில், மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.
இன்றைய போட்டியே இந்திய ரசிகர்களுக்கு தீபாவளியாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. ஆம், ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் நியூசிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொண்டு பட்டாசாய் வெடிக்கத் தொடங்கினர். ரோகித் குறைந்த பந்துகளில் வாணவேடிக்கை நிகழ்த்திவிட்டு 47 ரன்களில் வெளியேற, சுப்மன் கில்லோ தன் பங்குக்கு 79 ரன்கள் எடுத்த நிலையில் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். எனினும் அதற்குப் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் விராட் கோலியுடன் இணைந்தார். ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்த விராட் கோலி, 59 பந்துகளில் அரைசதம் எடுத்தார். இதன்மூலம் விராட் கோலி, வரலாற்றை மாற்றி எழுதினார்.
இதற்குமுன்பு, உலகக்கோப்பை தொடரில் இந்தியா விளையாடிய அரையிறுதிப் போட்டிகளில் விராட் கோலி வெறும் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தார். அதற்கு இன்று அரைசதம் அடித்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது. தொடர்ந்து நியூசிலாந்து பந்தை நாலாபுறமும் சிதறடித்த அவர், 106 பந்துகளில் சதமடித்தார்.
பின்னர் 113 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 117 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும், அவர் இன்றைய போட்டியில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். முக்கியமாக உலகக்கோப்பையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் படைத்திருந்த ஒருசில சாதனைகளை முறியடித்துள்ளார்.
இதையும் படிக்க: தொடர்ந்து சிக்ஸர் மழை: உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா!
கடந்த 2003 உலகக்கோப்பையில் அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர், 673 ரன்கள் எடுத்திருந்தார். அதை விராட் கோலி இன்று முறியடித்தார். இதன்மூலம் உலகக்கோப்பை தொடர் ஒன்றில் அதிகபட்ச ரன் (711) குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தைப் பிடித்தார். மேலும், உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் (117 ரன்கள்) சதம் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலிலும் விராட் கோலி முதல் இடம் பிடித்தார். அவர், 50 சதம் அடித்துள்ளார். ஏற்கெனவே இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் எடுத்திருந்தார். அதை, இன்று விராட் கோலி முறியடித்தார். நடப்புத் தொடரில் அவரின் சாதனையை விராட் சமன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து உலகக்கோப்பையில் 50+ ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலிலும் விராட் கோலி முதல் இடம் பிடித்தார். நடப்புத் தொடரில் விராட், 8 முறை 50+ ரன்கள் எடுத்துள்ளார். இதுபோன்ற சாதனையை 2003இல் சச்சினும், வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 2019இலும் தலா 7 முறை நிகழ்த்தியிருந்தனர். இந்தப் பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் மற்றும் டேவிட் வார்னர் தலா 6 முறை எடுத்து 3வது இடத்தில் உள்ளனர்.
உலகக்கோப்பைகளில் தொடர்ச்சியாக 50+ மேற்பட்ட ரன்களை எடுத்த இந்திய வீரர்களிலும் விராட் கோலியே முதல் இடம் பிடித்தார். அவர் 2019 உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 5 முறை 50+ மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். இதற்கு அடுத்த சச்சின் (1996, 2003), சித்து (1987), ஸ்ரேயாஸ் ஐயர் (2023) ஆகியோர் தலா 4 முறை எடுத்துள்ளனர்.
உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, ஆஸ். வீரர் ரிக்கி பாண்டிங், இலங்கை வீரர் குமார் சங்ககரா ஆகியோருடன் 3வது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். மூவரும் தலா 5 முறை சதம் அடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா 7 சதங்களுடன் முதல் இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 6 சதங்களுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.
உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளிலும் இந்திய பார்ட்னர்ஷிப் சாதனை புரிந்துள்ளது. அதன்படி, இன்றைய போட்டியில் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணை 163 ரன்கள் எடுத்துள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக 50+ ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்குடன் 2வது இடத்தைப் பகிர்ந்துகொண்டார். இருவரும் தலா 217 முறை எடுத்துள்ளனர். 50+ ரன்களை, 264 முறை எடுத்துள்ள சச்சின் முதல் இடத்தில் உள்ளார்.
முன்னதாக, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (13,705) குவித்த வீரர்களின் பட்டியலிலும் விராட் கோலி, 3வது இடத்துக்கு முன்னேறினார். இந்தப் பட்டியலில் 13,704 ரன்களுடன் 3வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்கைப் பின்னுக்குத் தள்ளினார். இந்தப் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதல் இடத்திலும், இலங்கை வீரர் குமார் சங்ககரா 14,234 ரன்களுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.
இதற்குமுன்பு, உலகக்கோப்பை தொடரில் இந்தியா விளையாடிய அரையிறுதிப் போட்டிகளில் விராட் கோலி வெறும் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்துள்ளார். அந்த வரலாற்றையும் இன்று மாற்றி எழுதியுள்ளார், விராட் கோலி.
இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 36 பேர் உயிரிழப்பு