2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் நடக்கவிருக்கும் ஒவ்வொரு போட்டியையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றும் வகையில் இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பிசிசிஐ “கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ்” என்ற திட்டத்தின் மூலம் இந்திய ஸ்டார்களை போட்டியைக் காண அழைப்பு விடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமையான இன்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் பாரத ரத்னா வென்றவருமான சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட்டை வழங்கி கவுரவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா. இதனை தங்களுடைய அதிகாரபூர்வ X வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் பிசிசிஐ, “நாடு மற்றும் கிரிக்கெட்டிற்கு இது ஒரு தனித்துவமான தருணம். கிரிக்கெட்டின் தலைசிறந்தவரும், நாட்டின் பெருமைக்கான சின்னமாக இருக்கும் சச்சின் டெண்டுல்கர் “கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ்” என்ற திட்டத்தின் மூலம் இணைகிறார். வளரும் இளம் தலைமுறைக்கு உத்வேகமாக இருந்துவரும் சச்சின் 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் ஒரு பகுதியாக இருப்பார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ்” என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவின் பல்வேறு துறைகளை சேர்ந்த ஐகானிக் நபர்களை பிசிசிஐ ஒருநாள் உலகக்கோப்பைக்கு அழைப்பு விடுத்து வருகிறது.
அது என்ன கோல்டன் டிக்கெட்? என்றால் சில நபர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விருந்தினர் பாஸ் ஆகும். இதன் மூலம் அவர்கள் உலகக் கோப்பை போட்டிகளுக்கு விஐபி அணுகலைப் பெறுகிறார்கள். இந்தியாவின் பல்வேறு துறைகளில் உச்சம் தொட்ட ஐகானிக் நபர்களை அழைக்கும் விதமாகவும், உலகக்கோப்பையை சிறப்பானதாக மாற்றும் விதமாகவும் இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. அனேகமாக, பிசிசிஐ மற்ற துறைகளில் உள்ள பல்வேறு ஐகான்களுக்கும் இதே போன்ற பாஸ்களை வழங்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ்” என்ற திட்டத்தின் மூலம் கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டவர்களில் சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது நபராகும். இதன் தொடக்கமாக கடந்த செவ்வாய் கிழமை அன்று பாலிவுட் சூப்பர் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ஜெய்ஷா முதல் கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். தற்போது வரை அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் என இரண்டு நபர்களுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இந்த கோல்டன் டிக்கெட் மூலம், அமிதாப் பச்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் போல கோல்டன் டிக்கெட் பெறுபவர்கள் அனைத்து போட்டிகளையும் ஒவ்வொரு மைதானத்திலும் உள்ள விஐபி பெட்டிகளில் இருந்து மற்ற வசதிகளுடன் கண்டுகளிக்கலாம்.