2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே மீதம் உள்ளன. கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய தொடருக்காக அனைத்து கிரிக்கெட் நாடுகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. கடந்த 2011 முதல் 2019 வரை உலகக்கோப்பை தொடரை நடத்திய நாடுகளே கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், இந்த முறையும் தொடரை நடத்தும் இந்தியாவே கோப்பையை வெல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்திய அணியும் அதற்கேற்றார்போல் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.
இந்திய அணியின் உலகக்கோப்பைக்கான 15 வீரர்களை அறிவிக்கும் போது, இந்த அணி எப்படி உலகக்கோப்பையை வெல்ல போகிறது என்ற பெரிய குழப்பம் ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் இருந்தது. காரணம் கிட்டத்தட்ட ஒருவருட காலமாக கிரிக்கெட் விளையாடாத மிடில் ஆர்டர் (கேஎல் ராகுல் & ஸ்ரேயாஸ் ஐயர்) வீரர்கள், ஒருவருடத்திற்கும் மேலாக களத்திற்கு வராத வேகப்பந்துவீச்சாளர் பும்ரா என பெரிய சோதனை வீரர்களாகவே அணிக்குள் இருந்தனர்.
பெரிய இடைவேளைக்கு பிறகு அனைத்து காயமான வீரர்களும் ஆசியக்கோப்பைக்குள் களம் கண்டனர். ஒருவேளை இவர்கள் ஆசிய கோப்பையில் சிறப்பாக விளையாடவில்லை என்றால், பெரிய சிக்கல் இந்திய அணிக்கு இருந்திருக்கும். ஆனால் காயத்திலிருந்து சிறப்பான ஃபார்முடன் திரும்பிய கேஎல் ராகுல் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பும்ரா எப்போதும் இல்லாத வகையில் இரண்டு பக்கமும் பந்தை திருப்பினார், கேஎல் ராகுலோ சிறப்பான பவுலிங் அட்டாக் வைத்திருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதத்தை பதிவு செய்து அசத்தினார். இந்திய அணியின் அனைத்து கவலைகளும் ஆசிய கோப்பை தொடரிலேயே பஞ்சாய் பறந்தன.
இந்திய அணி குறித்தும், எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பை குறித்தும் விமல்குமார் யுடியூப் சேன்னலின் நேர்காணலில் பேசியிருக்கும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, இந்தியாவின் ஒரே குறிக்கோள் கோப்பையை வெல்வது மட்டுமே என கூறியுள்ளார்.
ரோகித் சர்மா பேசுகையில், “இந்த உலகக்கோப்பையில் நானோ, கோலியோ, கில்லோ அல்லது மற்ற வீரர்களோ, சதங்கள் அடிப்பதும் இல்லை சதமே அடிக்கவில்லை என்தும் முக்கியமில்லை. எங்களுக்கு இந்த உலகக்கோப்பை வெல்வதே முக்கியம். எங்களுடைய ஆன்மாவின் முழு கவனமும் 2023 உலகக்கோப்பையை வெல்வதில் மட்டுமே இருக்கும்” என தெரிவித்துள்ளார்.