நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணியானது ஃபீல்டிங்கை வலுப்படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும், சிறந்த ஃபீல்டிங் செய்த வீரருக்கு பதக்கம் ஒன்றை வழங்கி ஊக்கப்படுத்திவருகிறது. அதுபோல பல்வேறு டீம்-பாண்டிங் நிகழ்வுகளை நடத்திவரும் இந்திய அணி, நடப்பு உலகக்கோப்பையில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் அசத்தி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் ஆதிக்கம் செலுத்திவருகிறது.
இந்நிலையில் நாளைய நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி குறித்து பேசியிருக்கும் ரோகித் ஷர்மா, அணியின் மனநிலை தெளிவாக இருப்பதாக கூறியுள்ளார். கடந்த காலத்தில் நடந்தவற்றை யோசிக்க தேவையில்லை என கூறிய ரோகித், அணியின் டீம்-பாண்டிங்கிற்காக ஃபேஷன் ஷோ நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
அரையிறுதிப்போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் கேப்டன் ரோகித் சர்மா, “கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது உங்கள் மனதிற்கு நன்றாகவே தெரியும். கடந்த காலத்தில் நடந்தது எல்லாமே கடந்த காலம் மட்டுமே. இன்று அதை பற்றி நாம் யோசிக்க தேவையில்லை. நாம் எல்லோருமே நேற்று என்ன நடந்தது என்றா யோசிப்போம்?இன்று என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என்பதைத்தானே வழக்கமாக சிந்திக்கிறோம். எனவே பத்து ஆண்டுகளுக்கு முன்பு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை அல்லது கடந்த உலகக் கோப்பையை நடந்தவை எல்லாம் கடந்த காலம் மட்டுமே. அதுகுறித்து அதிக விவாதம் செய்யவோ அல்லது அதிகம் பேசவோ செய்யத்தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் அணியின் மனநிலை என்ன என்பது குறித்து பேசியிருக்கும் ரோகித், “குழு செயல்பாட்டின் ஒரு பகுதியாக நாங்கள் ஒரு பேஷன் ஷோவைக் கூட நடத்தினோம். தற்போது அணியின் மனநிலை, அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதில் மட்டுமே இருக்கிறது. இது ஒரு நல்ல விஷயம் என்று மக்களுக்குத் தெரியாது, சில விஷயங்கள் தனிப்பட்டதாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். தரம்சாலாவில் போட்டிக்கு இடையே ஒரு ஃபேஷன் ஷோ நடத்தினோம், ஆனால் அதில் யார் வெற்றிபெற்றது என்று சொல்லமாட்டேன்” என நகைச்சுவையாக கூறியுள்ளார்.