இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியைத் (இங்கிலாந்து வெற்றி) தவிர்த்து, அடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரையும் வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, மார்ச் 7-ம் தேதி இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்த இங்கிலாந்து அணி, சிறப்பான தொடக்கத்தை அமைத்தது. சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி இந்தப் போட்டியிலும் அரைசதமடித்து அசத்தினார்.
நல்ல தொடக்கத்தை கொடுத்த இங்கிலாந்து அணிக்கு வில்லனாக வந்த குல்தீப் யாதவ் விக்கெட் வேட்டை நடத்தினார். 137 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே விட்டுக்கொடுத்து நல்ல நிலைமையில் இருந்த இங்கிலாந்தை, 5 விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப் 175 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்ற நிலைக்கு எடுத்துச்சென்றார். கடைசி 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் விரைவாகவே வீழ்த்த 218 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து அணி.
இங்கிலாந்தை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருமுனையில் ரோகித் நிலைத்து நின்று விளையாட, மறுமுனையில் அதிரடி காட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 பந்துகளுக்கு 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி அரைசதமடித்து அசத்தினார். இந்தப் போட்டியிலும் சதத்தை நோக்கி செல்லுவார்கள் என்று நினைத்தபோது, 57 ரன்னில் ஸ்டம்ப் அவுட்டாகி வெளியேறினார் ஜெய்ஸ்வால்.
பின்னர் கைக்கோர்த்த கில் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அற்புதமாக விளையாடிய ரோகித் சர்மா 13 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி தன்னுடைய 12வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.
அதேபோல சுப்மன் கில்லும் இந்த தொடரில் தன்னுடைய இரண்டாவது சதத்தை அடித்து மிரட்டினார். இருவரும் சதமடித்த உடனே வெளியேறினாலும், அடுத்தடுத்து களத்திற்கு வந்த சர்பராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் அரைசதமடிக்க இந்திய அணி 400 ரன்களை எட்டியது. டாப் ஆர்டர் வீரர்கள் ஐந்து பேரும் அரைசதமடித்து 15 வருடங்களுக்கு பிறகு சாதனை படைத்தனர்.
440 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என்ற நிலையில் இந்தியா விளையாடிவருகிறது.
ஒருமுறை தன்னுடைய சாதனைகளை யார் முறியடிப்பார்கள் என்ற கேள்விக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா என்று கூறினார் சச்சின். தற்போது அவருடைய சாதனைகளை கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் முறியடித்து அசத்திவருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணிக்காக 30 வயதுக்குமேல் அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில், முதலிடத்திலிருக்கும் சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார் ரோகித் சர்மா.
30 வயதுக்குமேல் இந்தியாவிற்காக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 35 சதங்களுடன் முதலிடத்தில் இருந்த சச்சினை சமன்செய்துள்ளார் ரோகித் சர்மா. தன்னுடைய குரு மற்றும் ரோல் மாடலான சச்சினின் பிரத்யேக சாதனையை சமன் செய்திருக்கும் ரோகித் சர்மா, இதுவரை 31 ஒருநாள் சதங்கள், 12 டெஸ்ட் சதங்கள் மற்றும் 5 டி20 சதங்கள் என மொத்தம் 48 சதங்களை பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
30 வயதுக்கு மேல் அதிக சதமடித்த இந்திய வீரர்கள்:
1. சச்சின் டெண்டுல்கர் - 35 சதங்கள்
2. ரோகித் சர்மா - 35 சதங்கள்
3. ராகுல் டிராவிட் - 26 சதங்கள்
4. விராட் கோலி - 18 சதங்கள்
5. சுனில் கவாஸ்கர் - 16 சதங்கள்