இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரவிச்சந்திரன் அஸ்வினின் தரமான சதம் மற்றும் ஜடேஜாவின் 86 ரன்கள் ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸ் முடிவில் 376 ரன்களை குவித்தது.
அதனைத்தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி, இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை தாக்குபிடிக்க முடியாமல் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 5 முறை ஸ்டம்புகளை தகர்த்த இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் 8 விக்கெட்டுகளை தட்டிச்சென்றனர். அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
227 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. இரண்டாவது நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது.
விராட் கோலி சமீபகாலமாக அதிகப்படியான டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை, அதன்காரணமாக டெஸ்ட் வடிவத்திலும் விராட் கோலி தன்னுடைய கம்பேக்கை கொடுக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் இருந்துவருகின்றனர். அதுமட்டுமில்லாமல், ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கும் இந்தியா வெற்றியோடு திரும்ப விராட் கோலியின் ஃபார்ம் என்பது முக்கியதேவையாக இந்தியாவிற்கு இருக்கவிருக்கிறது.
இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி கம்பேக் கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் இன்னிங்ஸில் எப்போதும் போல அவுட்சைடு வீசப்பட்ட பந்தை சேஸ்செய்ய சென்று 6 ரன்னில் வெளியேறினார் விராட் கோலி. அதேசமயம் இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்திய கிங் கோலி, 37 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் அடித்து களத்தில் நிலைத்து நின்றார்.
நல்ல டச்சிற்கு திரும்பிவிட்டார் இனி ரன்கள் எளிதாக வந்துவிடும் என நினைத்த போது, வங்கதேச ஸ்பின்னர் மெஹிதி ஹாசன் வீசிய பந்தை டிஃபண்ட் செய்த கோலி, அந்த பந்தை தன்னுடைய முன்காலில் வாங்கினார். பவுலர் அவுட்டென கத்த, அம்பயரும் அவருடைய கையை உயர்த்திவிட்டார்.
எதிர்பக்கம் நின்றிருந்த சுப்மன் கில்லிடம் சென்று உரையாடிய விராட் கோலி, ரிவ்யூ கேட்காமலேயே வெளியேறிவிட்டார். ஆனால் அல்ட்ரா எட்ஜ் வீடியோவில் பந்து பேட்டில் பட்டு சென்றது தெளிவாக தெரிந்தது. இதைப்பார்த்த கேப்டன் ரோகித் சர்மா வருத்தத்தில் முகத்தை சுளித்தார்.
சுப்மன் கில் ரிவ்யூ எடுக்க சொல்லிருக்க வேண்டும் என சில ரசிகர்கள் சமூகவலைதளத்தில் குற்றஞ்சாட்டிய நிலையில், கில் ரிவ்யூ எடுக்கசொன்னதாகவும் சில ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மையில் விராட் கோலி அவருடைய முடிவை அவராகவே எடுத்துவிட்டு அவுட்டாகமல் வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.