2024 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக ஒவ்வொரு அணிகளும் அவர்களுடைய கடைசி டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதேபோல பாகிஸ்தானுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி விளையாடிவருகிறது.
ஜனவரி 17-ம் தேதி தொடரின் 3-வது டி20 போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தான் விளையாடிய நிலையில், அதேநாளில் 3வது டி20 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
ரோகித்தின் சதத்தால் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், ஃபின் ஆலனின் அபாரமான சதத்தால் நியூசிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டி20 போட்டியில் சதமடிப்பதெல்லாம் மிகவும் அரிதாகவே நடக்கக்கூடிய ஒன்று, அதிலும் சிறப்பு வாய்ந்த விதமாக ரோகித் சர்மா மற்றும் ஃபின் ஆலன் இருவரும் ஒரே நாளில் டி20 சதங்களை பதிவுசெய்துள்ளனர். டி20 கிரிக்கெட்டில் 2 வீரர்கள் ஒரேநாளில் சதங்களை பதிவுசெய்வது இதுவே முதல் முறையாகும்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 69 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் விளாசிய ரோகித் சர்மா 121 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார்.
அதேவேளையில் பாகிஸ்தானுக்கு எதிராக 16 சிக்சர்களையும், 5 பவுண்டரிகளையும் பறக்கவிட்ட ஃபின் ஆலன் 62 பந்துகளில் 137 ரன்களை குவித்து அசத்தினார். இரண்டு வீரர்களும் வெற்றியின் பக்கத்தில் ஆட்டநாயகன்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என முன்னிலை பெற்றுள்ள நியூசிலாந்து அணி, தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.