நடந்துவரும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் தன்னுடைய அற்புதமான ஃபார்மால் ஜொலித்துவரும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 131 ரன்களும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 86 ரன்களும் அடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது ஐசிசி வெளியிட்டிருக்கும் தரவரிசை பட்டியலில், ஒருநாள் கிரிக்கெட்டுக்கான பேட்டர்கள் தரவரிசையில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் ரோகித் சர்மா. இந்த பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி 9வது இடத்தில் நீடிக்கிறார்.
இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதன்முறையாக விராட் கோலியை பின்னுக்கு தள்ளியுள்ளார் ரோகித் சர்மா. விராட் கோலியும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திவருகிறார்.
குறிப்பாக ஆஸ்திரேலியாவுடனான மோசமான விக்கெட் சரிவுகளுக்கு பிறகு 86 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார் கோலி. அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தன்னுடைய ஹோம் ஸ்டேடியத்தில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார்.
சமீபத்தில் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற போவதாக அறிவித்திருந்தார் தென்னாப்பிரிக்க வீரர் டி காக். இந்த அறிவிப்பை அறிவித்ததற்கு பிறகான உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ந்து 2 சதங்களை பதிவு செய்த டிகாக், ஒருநாள் தரவரிசையில் சிறந்த ரேங்கிங்கை பதிவு செய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டுக்கான பேட்டர்கள் தரவரிசையில் 742 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்துள்ளார் டி காக். முதலிடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும், இரண்டாவது இடத்தில் சுப்மன் கில்லும் நீடிக்கின்றனர்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டுவரும் டிரெண்ட் போல்ட் 659 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றியுள்ளார். முதலிடத்தில் 660 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய பவுலர் ஹசல்வுட் நீடிக்கிறார். இந்திய அணியை பொறுத்தவரையில் 656 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறார் முகமது சிராஜ்.