ஒரு அணியில் 6 வீரர்கள் மட்டுமே பங்குபெறும் 6 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக ஹாங்காங் சிக்ஸஸ் தொடர் நடந்துவருகிறது. இந்த தொடரில் அனைத்து கிரிக்கெட் நாட்டையும் சேர்ந்த 6 முன்னாள் வீரர்கள் அணியில் பங்கேற்று விளையாடுகின்றனர். ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் “இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம், ஓமன், யுஏஇ, நேபாள், ஹாங் காங்” முதலிய 12 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
ராபின் உத்தப்பா தலைமையிலான இந்திய அணியில் “ராபின் உத்தப்பா, பரத் சிப்ளி, ஸ்ரீவத் கோஸ்வாமி, ஸ்டூவர்ட் பின்னி, கேதார் ஜாதவ் மற்றும் ஷபாஸ் நதீம்” முதலிய 6 முன்னாள் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
பாகிஸ்தான், யுஏஇ, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோற்றுள்ள இந்திய அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. யுஏஇ-க்கு எதிரான வெல்லவேண்டிய முக்கியமான போட்டியில் 1 ரன்னில் தோற்றதால் இந்தியா வெளியேறியுள்ளது.
ஹாங்காங் இண்டர்நேஷனல் சிக்ஸஸ் தொடரில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 6 ஓவர்கள் முடிவில் 120 ரன்கள் குவித்து அசத்தியது. இதில் இங்கிலாந்து கேப்டன் ரவி போபராவுக்கு எதிராக 4-வது ஓவரை வீசிய ராபின் உத்தப்பா 6 பந்திலும் 6 சிக்சர்களை விட்டுக்கொடுத்தார். ஒரு ஒயிடு பந்து மற்றும் 6 சிக்சர்களுடன் 37 ரன்களை விட்டுக்கொடுத்தார் உத்தப்பா. ரவி போபரா அடித்த 6 சிக்சர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தத் தொடர் அனைவரையும் கவரும் வகையில் வித்தியாசமாக நடைபெற்றுவருகிறது, ஓமன், யுஏஇ அணிகள் எந்த எதிரணியையும் வீழ்த்தி வருகின்றன. இதுவரை நடந்து முடிந்துள்ள 4 காலிறுதி போட்டிகளில் ஹாங்காங்கை வீழ்த்தி ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான், நேபாளை வீழ்த்தி இலங்கை, வங்கதேசத்தை வீழ்த்தி யுஏஇ அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.