கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட், அறுவை சிகிச்சைக்கு பிறகு மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்டார். கிட்டத்தட்ட ஒருவருட காலமாக ஓய்வில் இருந்த ரிஷப் பண்ட் 2023 ஐபிஎல் தொடரில் கூட பங்கேற்காத நிலையில், டெல்லி அணி அவரை மீண்டும் அணிக்குள் தக்கவைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுவரும் ரிஷப் பண்ட் நடக்கவிருக்கும் 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என்றும், இம்பேக்ட் பிளேயராக விளையாடுவார் என்றும் தகவல் கசிந்தது. இதனால் பண்ட் மீண்டும் அணிக்கு திரும்புவாரா என்ற குழப்பம் நீடித்த நிலையில், தற்போது 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என டெல்லி கேபிட்டல்ஸ் உறுதிசெய்துள்ளதாக க்றிக்பஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக ரிஷப் பண்ட் இன்னும் முழுமையாக உடற்தகுதி பெறாத நிலையில், அவர் முழு நேர வீரராக களமிறங்கமாட்டார், ஆனால் இம்பேக்ட் பிளேயர் விதியின் மூலம் நிச்சயம் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது செய்தி வெளியிட்டிருக்கும் க்றிக்பஸ், ரிஷப் பண்ட் கேப்டனாக டெல்லி அணியை வழிநடத்துவார் என்று கூறியுள்ளது.
க்றிக்பஸ் வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, ”ரிஷப் ப்ண்ட் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார். பிசிசிஐ அவரது உடற்தகுதியை உறுதிசெய்த பிறகே பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதை டெல்லி நிர்வாகம் உறுதிப்படுத்தும். மற்றபடி அவர் ஒரு ஃபீல்டராகவும், பேட்ஸ்மேனாகவும் அணியில் நீடித்து அணியை வழிநடுத்துவார்” என்று கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
ரிஷப் பண்ட் அணியில் பங்கேற்காத போதும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அவரை பாதுகாத்து வருகிறது. நடந்து முடிந்த 2023 ஐபிஎல் தொடரில் கூட ரிஷப் பண்ட்டின் ஜெர்சியை டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர்களின் பெவிலியனில் வைத்து நினைவு கூர்ந்தது. மேலும் தொடர்ச்சியாக அவருடைய அப்டேட்டை கண்கானித்து வருகிறது.
இந்திய அணியை பொறுத்தவரையில் ரிஷப் பண்ட் இல்லாமல் கிட்டத்தட்ட 64 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒரு ஐபிஎல் தொடரையும் பண்ட் தவறவிட்டுள்ளார். ஏற்கெனவே இந்திய அணியில் வீரர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால், பண்ட்டின் கம்பேக் என்பது ஏதாவது மாயாஜாலம் நடந்தால் மட்டுமே சாத்தியமாகும்.