இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மூன்று போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து அணி, பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்றுபிரிவிலும் இந்தியாவை டாமினேட் செய்து முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மட்டுமில்லாமல், இந்தியாவை அவர்களின் சொந்த மண்ணிலேயே வைத்து ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது.
இந்த தொடரில் இந்தியா மிகமோசமாக விளையாடியிருந்தாலும், இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மட்டும் ஸ்டேண்ட் அவுட் பிளேயராக இருந்தார். 6 இன்னிங்ஸ்களில் 20, 99, 18, 0, 60, 64 என மூன்று அரைசதங்களை அடித்த பண்ட், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நம்பிக்கையளிக்கும் ஒரே வீரராக உள்ளார்.
இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டு முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார் ரிஷப் பண்ட். மற்ற அனைத்து இந்திய வீரர்களும் முன்பிருந்த நிலையை விட பின் தங்கியுள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான சிறந்த ஆட்டத்திற்கு பிறகு ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் கண்டிருக்கும் பண்ட், 5 இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளார். இது அவருடைய இதற்கு முந்தைய சிறந்த பேட்டிங் தரவரிசையை விட ஒரு இடம் மட்டுமே பின் தங்கியுள்ளது.
கடந்த 2022 ஜூலை மாதம் 5வது இடம் பிடித்ததே சிறந்த தரவரிசையாக இருந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடருக்கு பின் அவருன் ரேங்கிங் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் 903 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் பின் தங்கி 777 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சு தரவரிசையை பொறுத்தவரையில் ரபாடா முதலிடத்தில் உள்ளார், பும்ரா, அஸ்வின் மற்றும் ஜடேஜே முறையே 3வது, 5வது, 6வது இடத்தில் உள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்சில் 90 ரன்கள் எடுத்த இந்திய வீரர் சுப்மன் கில் நான்கு இடங்கள் முன்னேறி 16வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தொடர் நாயகன் வில் யங், 29 இடங்கள் முன்னேறி ஒட்டுமொத்தமாக 44வது இடத்தைப் பிடித்தார். வாஷிங்டன் சுந்தரும் டெஸ்ட் பந்துவீச்சாளர்களில் ஏழு இடங்கள் முன்னேறி 46வது இடத்திற்கு முன்னேறினார்.
டெஸ்ட் தரவரிசையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகமோசமான தரவரிசைக்கு சென்றுள்ளார் விராட் கோலி. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்த கோலி, ஐசிசி பேட்டிங் தரவரிசையில் 22வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் 20 இடங்களுக்கு கீழே விராட் கோலி செல்வது இதுவே முதல்முறை. கடைசியாக அவர் 2014-ம் ஆண்டு 20 இடங்களுக்கு கீழாக இருந்துள்ளார்.