கடந்த 2022-ம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய விபத்திற்கு பிறகு வந்து இந்தியாவின் டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்து கோப்பை வென்ற ரிஷப் பண்ட்டை, முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் ஒரு வெற்றியாளராக முத்திரை குத்தினார். மேலும், இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் தனது நாட்டிற்காக குறுகிய காலத்தில் என்ன செய்தார் என்பது அவரது மகத்துவத்திற்கு சான்றாகும் என்பதை விளக்கினார்.
26 வயதான பண்ட், இந்தியாவுக்கான மூன்று வடிவங்களிலும் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார், இந்த ஆண்டின் தொடக்கத்தில் காயத்திலிருந்து மீண்டு 15 மாதங்களுக்கு பின் மறுபிரவேசம் செய்தார். ஆஸ்திரேலியாவில் கடினமான சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணி தயாராகி வரும் நிலையில், பண்ட் கடந்த முறை போலவே இந்தியாவை ஹாட்ரிக் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு அழைத்துச்செல்லும் முக்கியமான வீரராக இருப்பார் என்று ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ளார்.
அவரது விளையாட்டுத்தனம் மற்றும் ஸ்டம்ப் மைக் அரட்டையின் காரணமாக, பண்ட் பெரும்பாலும் ஒரு 'வேடிக்கையான' வீரராகக் கருதப்படுகிறார். ஆனால் பாண்டிங் ஆஸ்திரேலியா அணியை அந்தக் கதையால் ஏமாற வேண்டாம் என்று எச்சரித்தார்.
ரிஷப் பண்ட்டை புகழ்ந்து பேசிய ரிக்கி பாண்டிங், தோனியுடன் ஒப்பிட்டு குறுகிய நேரத்தில் தீவிரமான வீரராக பண்ட் மாறியதாக குறிப்பிட்டார்.
ஸ்கை ஸ்போர்ட்ஸ் உடன் பேசியிருக்கும் பாண்டிங், ”கடுமையாக காயமடைந்த ஒரு வீரரின் குறிப்பிடத்தக்க மறுபிரவேசம் இது. முதலில் அவர் இதற்குபிறகு கிரிக்கெட்டிற்கு திரும்புவாரா, அப்படி திரும்பினாலும் எந்தளவு அவரால் கிரிக்கெட்டை விளையாட முடியும் என்ற கேள்வி எங்களுக்கு இருந்தது.
ஆனால் 12 மாதங்களுக்கு முன்பு ஐபிஎல்லுக்கு திரும்புவேன் என்று குறிப்பிட்ட போது, அவர் ஒரு துணை வீரராக மட்டுமே செயல்படுவார் என்று நினைத்தோம். ஆனால் எங்களுக்காக அதிகப்படியான ரன்களை எடுத்தார் மற்றும் ஸ்டம்புகளின் பின்னால் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அவர் ஒரு தீவிரமான வீரர்” என்று முன்னாள் டெல்லி கேபிடல்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.
2024 ஐபிஎல்லில் DC க்காக விளையாடிய ரிஷப் பண்ட், கேப்டனாக வழிநடத்தியது மட்டுமில்லாமல் 40.55 சராசரி மற்றும் 155.40 ஸ்ட்ரைக் ரேட்டில் 446 ரன்கள் எடுத்தார். மேலும் விக்கெட் கீப்பிங்கிற்காக ஆட்டநாயகன் விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பண்ட் குறித்து பேசிய பாண்டிங், "அவர் விளையாடுவதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம், ஸ்டம்ப் மைக்கில் அவர் பேசுவதை கேட்டிருக்கிறோம், அவர் எப்போதும் அணியுடன் பயணப்படக்கூடிய ஒரு வீரர், அவர் தனது கிரிக்கெட்டை நேசிக்கிறார், அதனால்தான் அவர் ஒரு வெற்றியாளராக இருக்கிறார். வெறும் ரன்களை எடுப்பதற்காக மட்டுமே அவர் விளையாடுவதில்லை. பண்ட் ஏற்கனவே 4 அல்லது 5 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். ஆனால் தோனிகூட 90 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு 3 அல்லது 4 சதங்களை மட்டுமே அடித்துள்ளார். இந்த பையன் பண்ட் எவ்வளவு சிறந்தவர், அவர் ஒரு தீவிரமான கிரிக்கெட் வீரர்” என்று புகழாரம் சூட்டினார்.