இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடந்த 16 ஆம் தேதி துவங்கியது. டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் பாரம்பரியமிக்கதாக கருதப்படும், இந்தத் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 393 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்த நிலையில், ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் களமிறங்கியது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி சார்பில் துவக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா களமிறங்கினர். டேவிட் வார்னர் 9 ரன்களில் அவுட்டாக, அவருக்கு அடுத்து வந்த மார்னஸ் லாபுஷேன் டக் அவுட்டாகினார். ஆஸ்திரேலிய அணியில் விக்கெட்டுகள் சரிந்துக்கொண்டே செல்ல, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கவாஜா மட்டும் நிலைத்து ஆடிக்கொண்டிருந்தார். இதனால், இங்கிலாந்து அணிக்கு நெருக்கடிக்கு அதிகரித்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பலமுறை ஃபீல்டிங்கை மாற்றியும் பலனிக்கவில்லை. பின்னர் கடைசியாக ஃபீல்டிங்கில், கவாஜாவை சுற்றியும் குடை வடிவில் (Brumbrella) , நெருங்கிய தூரத்தில் ஃபீல்டர்களை நிறுத்திவைத்தார். அதற்கு பலன் கைமேல் கிடைத்தது. அதன்படி, இங்கிலாந்து வீரர் ராபின்சன் 3-வது நாளில், 113-வது ஓவரில் 4-வது பந்தை ஃபுல் லென்த்தில் வீசியபோது, அதனை கவாஜா தவறவிட்ட நிலையில், பந்து ஸ்டம்பில் பட்டு 141 ரன்களுக்கு அவுட்டானார்.
இந்த தொடரை வர்ணனை செய்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து அணியின் கேப்டனும், ஆல் ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸை வெகுவாக பாராட்டினார். வர்ணனையின்போது அவர் தெரிவித்ததாவது, “டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோன்ற ஒரு ஃபீல்டிங்கை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். பேட்ஸ்மேனின் முகத்திற்கு முன்னால் ஃபீல்டர்களின் குடை மட்டுமே இருந்தது. கவாஜா கொஞ்சம் இறங்கி வந்து அடிக்க முயற்சிசெய்து, அதற்கான இடம் கொடுத்தார். கடைசியில் ஸ்டம்ப் அவுட்டாகினார். யார்க்கர் பந்துவீச்சு ஆஃப் ஸ்டம்பில் பட்டு கவாஜா வெளியேறியுள்ளார்.
உண்மையில் இந்த ஃபீல்டிங் அருமையான விஷயம். ஒரு அணி இந்த வழியில் விளையாடுவதைப் பார்ப்பது, டெஸ்ட் போட்டிக்கு உண்மையிலேயே புத்துணர்ச்சி அளிக்கிறது. ஒரு கேப்டன் (பென் ஸ்டோக்ஸ்) தன்னால் முடிந்த அனைத்தையும் முயற்சி செய்து மகிழ்ச்சி அடைகிறார். ஒவ்வொரு பந்திலும் அவர் மாற்றங்களைச் செய்கிறார். நிச்சயமாக இது சிறந்தது. இது செயல்திறன் மிக்க கேப்டன்சி. எப்போதும் விளையாட்டை முன்னோக்கி நகர்த்த அவர் முயற்சிக்கிறார், அதுமட்டுமின்றி ஒரு விக்கெட்டை எடுத்து ஆட்டத்தின் வேகத்தை மாற்றக்கூடிய சிறிய வழியையும் அவர் உன்னிப்புடன் பார்க்கிறார்.
கவாஜாவை அவுட்டாக்குவதற்காக எத்தனை முறை அவர் ஃபீல்டிங்கை மாற்றினார். குறிப்பாக, கவாஜாவை களத்திலிருந்து வெளியேற்றுவதற்கு எத்தனைவிதமான பந்துவீச்சு மாற்றங்கள் மற்றும் தந்திரங்களை அவர் செய்து வந்தார். இறுதியாக அவரது ஃபீல்டிங் மாற்றம் வேலை செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில், 4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்களுக்கும், ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்களும் எடுத்துள்ளது. 5 ஆம் நாள் மற்றும் இறுதி நாளான இன்று, ஆஸ்திரேலிய அணி 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடவுள்ளது. இன்னும் 7 விக்கெட்டுகள் கைவசம் உள்ளது.