அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற வன்முறை போராட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சிலர் காணாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசினா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இதற்கிடையே ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு, போராட்டத்தை முறியடிக்க சதி திட்டம் உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கலவரத்தின்போது கொல்லப்பட்டவருக்கான எஃப்ஐஆரில் வங்கதேச கிரிக்கெட் வீரரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாகிப் அல் ஹசனின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகினது. ஷேக் ஹசினா உள்ளிட்டோர் அடங்கிய 147 பேர் அடங்கிய குற்றவாளிகள் பட்டியலில் 28-வது குற்றவாளியாக ஷாகிப் அல் ஹசனின் பெயர் இணைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பதிவுசெய்யப்பட்ட கொலை வழக்கின் படி, வங்கதேசத்தில் ஆகஸ்டு 5-ம் தேதி நடைபெற்ற கலவரத்தின்போது ஆடைத் தொழிலாளியான முகமது ரூபல் என்பவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது ரூபல் இரண்டு நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
இதனால் தன்னுடைய மகன் இறந்ததையடுத்து முகமது ரூபலின் தந்தை ரஃபிகுல் இஸ்லாம் கொலைக்கான குற்றவாளிகளை எதிர்த்து வியாழக்கிழமை வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ஷாகிப் அல்ஹசன் உட்பட 147 பேர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே கொலைக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளாக இணைக்கப்பட்டுள்ளனர். அதில் ஷாகிப் 28வது குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டும் என்பதால் உடனடியாக அவரை அணியிலிருந்து நீக்குமாரு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியாகியிருக்கும் தகவலின் படி, ”வங்கதேச உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பாரிஸ்டர் ஷாஜிப் மஹ்மூத் ஆலம் சனிக்கிழமை வங்கதேச கிரிக்கெட் வாரியமான BCB-க்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஷாகிப்பிற்கு எதிராக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இப்போது விசாரணை அவசியம் என்றும், சட்டச் செயல்பாட்டிற்கு உதவுவதற்காக ஷாகிப் அல் ஹசன் அணியிலிருந்து விலகி வங்கதேசத்திற்கு திரும்புவதற்கு BCB உதவ வேண்டும் என்றும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாக” வங்கதேசத்தின் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஆனால் தற்போது பாகிஸ்தானில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் ஷாகிப் அல் ஹசன், அங்கிருந்து திரும்பவேண்டும் என்பது போலான எந்த அறிவிப்பையும் பிசிபி வெளியிடவில்லை.