ஒரே நேரத்தில் 2 பிசிசிஐ விருதுகளை அள்ளிய ரவிச்சந்திரன் அஸ்வின்! என்னென்ன விருதுகள்?

இந்திய முன்னாள் வீரர்கள், சமகால வீரர்கள் மற்றும் அறிமுக வீரர்கள் என பல்வேறு வீரர்களுக்கு பிசிசிஐ விருதுகளை வழங்கி சிறப்பித்தது.
ashwin
ashwinBCCI
Published on

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு கோவிட் தொற்று காரணத்தால் இந்த விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படாமல் தடைபட்டநிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 2019-20, 2020-21, 2021-22, 2022-23 முதலிய ஆண்டுகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா தற்போது நடைபெற்றது.

ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் இந்திய கிரிக்கெட் அணியின் இந்நாள், முன்னாள் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ‘சி.கே.நாயுடு’ விருது, ஆண்டின் சிறந்த வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருது, அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்தவருக்கான “திலீப் சர்தேசாய்” விருது, சிறந்த அறிமுக வீரருக்கான விருது என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

ravi shastri
ravi shastri

அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ரவி சாஸ்திரி மற்றும் ஃபரூக் இன்ஜினியர் இருவருக்கும் ‘சி.கே.நாயுடு’ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும், 2019-20ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருது முகமது ஷமிக்கும், 2020-21ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருது, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், 2021-22ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கும், 2022-23ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருது சுப்மன் கில்லுக்கும் வழங்கப்பட்டன.

அஸ்வின் கைப்பற்றிய 2 பிசிசிஐ விருதுகள்!

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ‘பாலி உம்ரிகர்’ மற்றும் “திலீப் சர்தேசாய்” என்ற இரண்டு விருதுகளை தட்டிச்சென்றார்.

பாலி உம்ரிகர் விருது - ஒவ்வொரு ஆண்டிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வழங்கப்படும் விருதானது “பாலி உம்ரிகர் விருது”. இது பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு அடுத்தப்படியான இரண்டாவது மிகப்பெரிய விருதாகும். அதன்படி 2020-2021ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருது, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. 2021ம் ஆண்டில் 18 போட்டிகளில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் 54 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, 3 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

bcci award
bcci award

திலீப் சர்தேசாய் விருது - ஒரு தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் என சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வழங்கப்படும் திலீப் சர்தேசாய் விருதை அஸ்வின் 3வது முறையாக பெறுகிறார். 2022-2023ல் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த அஸ்வின், ஒரே போட்டியில் 5 மற்றும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 2 போட்டிகள் கொண்ட தொடரில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com